தறி கெட்டு திரிகிறேன் நானம்மா-வித்யா

மனம் தாழ்ந்து
கவலைதோய்ந்து
முகம் வாடி
போதை தேடி நான்
காத்திருக்க........
தேநீரோடு என் துயர்நீக்க
நீ வேண்டுமம்மா........!

நட்பெல்லாம் ஒதுங்கிக்கொள்ள
யாரும் நண்பனில்லை
என்றேங்கும் போது........
புன்முறுவல் பூத்து
நட்பின் அர்த்தமாய்
நீ வேண்டுமம்மா........!

தாக்குதலில் வீழ்ந்து
மனம் நொந்து
உலகம் தூக்கிவீசிய
கோர வார்த்தைகள்
ஒருபக்கம் குத்தி கிழிக்க
பக்க பலமாய் தோள் தட்ட
நீ வேண்டுமம்மா...........!

பயம் கொண்டு பதுங்கி
அச்ச மழையில் நனைந்து
நடுங்கும் போதுபாதுகாப்பு
வளையமெனபோர்வையோடு
நீ வேண்டுமம்மா........!

உறக்கம் தொலைத்து
தலையணையை அணைத்து
கண்ணீர் சிந்தும் இரவுகளில்
இறுக அணைத்து உச்சி முகர
நீ வேண்டுமம்மா...........!

என்னையே நான் வெறுத்து
உள்ளிருந்து போர் தொடுத்து
மரணத்திற்கு அழைப்பு விடுக்கும்
வேளையிலே.......என்னை
எனக்கு புதியதாய் காட்ட
நீ வேண்டும்மா.......!

எனை நேசிக்க யாருமில்லை
என நான் யோசிக்கும் போது
நான் கேட்ட காதல் கதைகளெல்லாம்
அர்த்தமற்றதாகிட என் மீதான
உன் காதலை உலகிற்கு சொல்லிட
நீ வேண்டுமம்மா........!

நீ இல்லாது.....
கடிவாளமில்லா குதிரையாய்
தறிகெட்டு திரிகிறேன் நானம்மா........!




****************என் நண்பனின் உண்மைக்கதை*************

எழுதியவர் : வித்யா (14-Mar-14, 4:57 pm)
பார்வை : 166

மேலே