உரிமையாய் நட்பையே யாசிக்கின்றேன்

குறும் பா பலதந்துவிட்டு
பெரும் பா தரவந்திருக்குமென்னை
கரும் பாக ஏற்பீரோ!
கருத்து மழை பொழிவீரோ!

அன்னைத் தமிழில் எழுதவந்தேன்!
அன்பாக பலகவிதை சொல்லவந்தேன்!
அணைத்து எனைவழிநடத்து கவியுலகேயென‌
அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

ஆன்றோரோ சான்றோரோ மாந்தர்களே!
ஆயிரமாயிரம் கவிபடைக்கும் சீலர்களே!
ஆங்காங்கே கருத்துதரும் அன்பர்களே!
ஆசையுடனே அழைக்கின்றேன் நண்பர்களே!

இயல்இசை நாடகமாய் தமிழ்கண்டேன்!
இயல்பான சொற்களினால் கவிதந்தேன்!
இயற்பியலாய் வேதியலாய் தமிழ்சிரிக்க‌
இயங்குமெந்தன் மூளைக்குள்ளே ஆட்சிசெய்ய‌

ஈரேழு மாதங்களாய் எழுத்திலுள்ளேன்!
ஈரெட்டு வயதுமுதல் எழுதுகின்றேன்!
ஈரோட்டு அருகிலுள்ள நகரம்விட்டு
ஈராயிரம் மைல்தாண்டி நானுமுள்ளேன்!

உண்மையாய் உண்மையை நேசிக்கின்றேன்!
உரிமையாய் நட்பையே யாசிக்கின்றேன்!
உள்ளம்மகிழ பலகவிதையிங்கே வாசிக்கின்றேன்!
உற்சாகம்பொங்க நான்தினமும் யோசிக்கின்றேன்!

ஊருவிட்டு ஊருவந்து பலநாட்களாச்சு!
ஊத்துதண்ணி குடிச்சு பலவருசமாச்சு!
ஊதாகலரு ரிப்பனெனக்கு பிடிச்சுபோச்சு!
ஊதுபத்தி போலமணக்க ஆசையாச்சு!

எல்லையில்லா நட்புக்கடல் இங்குகண்டேன்!
எனக்கான எழுத்தாணியாய் எழுத்தைக்கொண்டேன்!
எழுச்சிமிகு சூரியனாய் மிளிர்ந்திடவே
எழுதினேன் எழுதுகின்றேன் எழுதிடுவேன்!

ஏழுகடல் தாண்டிவாழும் எங்கள்தமிழ்!
ஏழிசையை போலினிக்கும் பொங்கல்தமிழ்!
ஏழுழகம் வாழுமெங்கள் அன்புதமிழ்!
ஏவாளாய் பலமொழிகள்தந்த ஆதாம்தமிழ்!

ஐந்தறிவி போலதமிழ் இன்பம்தந்து
ஐந்துநில மக்களையும் புத்துணர்வூட்ட‌
ஐயங்கள் இலக்கணத்தில் போகவைத்து
ஐயாக்கள் வழிநடத்த ஆசைகொண்டேன்!

ஒருகுழுவாய் பலநூல்கள் படைத்திடுவோம்!
ஒன்றொன்றாய் பலவெற்றி பெற்றிடுவோம்!
ஒற்றுமையால் பலர்மனதை ஜெயித்திடுவோம்!
ஒன்றிணைந்தே தமிழ்தாயை தொழுதிடுவோம்!

ஓங்கட்டும் தமிழணங்கின் புகழொலிகள்!
ஓடட்டும் தமிழ்பழிக்கும் அறிவிலிகள்!
ஓருறுதி பூண்டிடுவோம் தமிழைக்காக்க‌
ஓதிடுவோம் இருக்கும்மட்டும் தமிழ்வாழ்த்து!

ஔவியம் தேவையில்லை எவருக்குமே
ஔதாரியம் உயிர்மூச்சாய் கொண்டிருப்போம்
ஔசித்தியம் தமிழறிந்த மனதிற்குண்டு
ஔலியா தமிழுக்கென்றும் நாம்மட்டும்

எஃகைப்போல் தமிழும்கூட மிகஉறுதி!
அஃதுஅதனால் செம்மொழிக்கும் மிகதகுதி!
அஃறிணையின் வாழ்த்துக்களும் வானமெட்டும்
இஃதுணர்வோம் கவிபுனைவோம் வாழுமட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Mar-14, 5:50 am)
பார்வை : 752

மேலே