நான் ரசித்த ஒரு நாள் மழை

இலேசாகவே தூர
ஆரம்பித்தது மழை...
கீழ்வானிலே அழகாய்
ஒரு மின்னல் கீற்று...

தொலை தூரத்தில் எங்கோ
முழங்கிய இடியோசை
மழை விட்டும் கூட தூவானம்
இன்னும் விடவில்லை...

எங்கிருந்தோ சற்று இதமாக
வீசிய தென்றல் வழியே...
கண்ணாடி இடுக்கினூடே
உள் நுழைந்த சாரல்...

முகங்களையும், காதூகளையும்
வருடிச்சென்றது மட்டுமல்லாமல்
எல்லா இடங்களிலும் ஈரங்களை
கொண்டு சேர்த்தது...

சாரல் எங்கும் பரவத் தொடங்க
மெதுவாக ஜன்னல்களை மூடினேன்
கண்ணாடியில் இன்னும் பெய்து
கொண்டுதான் இருக்கிறது மழை...

கையில் ஏந்திய தேனீர் கப்புடன்
ஜன்னல் அருகே அமர்ந்து...
என் முடிவற்ற தனிமை வழியே
ரசித்துக் கொண்டிருந்தேன் மழையை...

பச்சை இலைகள் மழைத்துளிகளால்
ஈரமும், குளிருமாய்
தலை துவட்டாமலே
மரங்கள்...
செடிகள்...
கொடிகள்...

மழை நின்ற பின்னும்

இந்த இதமான தனிமை
இன்னும் சற்று நேரம்
நீள வேண்டுமென என்
உள்ளமும் ஏங்கியது...

"அந்த ஒரு நாள் மழை"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 6:13 pm)
பார்வை : 580

மேலே