ஹாப்பி ஹோலி

வண்ணப் பொடிகள் தூவி
வண்ண நீரைப் பாய்ச்சி
வசந்தத்தின் வரவை நோக்கி
வரவேற்கும் இன்பத் திருநாள் !
பங்குனி மாதப் பௌர்ணமியில்
ரங்கபஞ்சமி எனும் ஹோலி
பொங்கும் அன்பில் இந்துக்கள்
எங்கும் கொண்டாடும் திருநாள் !
பிரகலாதன் உயிரை அழிக்க
பிள்ளையென்றும் பாரா இரண்யகசிபு
தங்கை ஹோலிகா மடியில்
தன்பிள்ளை அமர்த்தி தீயிட
நாராயணனே சரண் என
நம்பித் தொழுதான் சிறுவன்
நங்கை ஹோலிகா எரிந்தாள்
நலமுடன் எழுந்தான் பிரகலாதன் !
பொசுங்கிடும் தீமைகள் எரிதழலில்
பொங்கிடும் நன்மைகள் புதுப்புனலாய்
தீயகுணங்கள் விடைபெற் றோட
தீச்சுடர் போலே ஒளிரும்நாள் !
உறவையும் நட்பையும் வெளிப்படுத்தும்
உன்னதப் பாசத் திருநாள் !
இனிப்புகள் அன்புடன் பரிமாறி
இதயங்கள் மகிழும் நன்னாள் !
வசந்தங்கள் வாழ்வில் சிறக்க
வண்ணங்கள் பூசி மகிழ்க
எண்ணங்கள் போலே வாழ்க
எல்லையில்லா ஆனந்தம் அடைக ....!!