எது தொடரும் - கே-எஸ்-கலை

சாதி கொண்டு மனிதம் கொன்று
நீதி தோற்குமா ? - இதைப்
பூமி ஏற்குமா ?
கடவுள் தேடி மனிதம் தொலைக்கும்
காலம் முடியுமா ? - இந்த
ஞாலம் விடியுமா ?
உடலை விற்றுப் பிழைக்கும் கூட்டம்
நெஞ்சை மாற்றுமா? -இல்லை
நஞ்சை ஊற்றுமா?
விடலைப் பருவ முளைகள் மண்ணில்
செழித்து வளருமா ? - இல்லை
அழித்து தளருமா?
குடியில் வீழ்ந்துக் குடியைக் கெடுத்து
தாழ்ந்துச் சாவரோ? - விட்டு
வாழ்ந்துப் போவரோ?
பூக்கா பூக்களைப் பிடுங்கிப் புசிக்கும்
கயமை அடங்குமா ? இல்லை
நேர்மை முடங்குமா?
நொடியில் மனிதர் வாழ்க்கை அழிக்கும்
பிணிகள் சாகுமா ? - இல்லை
உயிர்கள் போகுமா?
வெடியில் உலகை தகர்க்கும் கூட்டம்
புதைந்துப் போகுமா ? - புவி
சிதைந்துப் போகுமா?