மழை நாள்

தொடர்ந்து பெய்துகொண்டிருந்த மழையை
கைநீட்டீ நனைத்துக்கொண்டே நான்
வீட்டுத் திண்ணையின் முனையில் நின்றேன்.
மண்ணோடு சேர்ந்து வேறொரு நிறத்தில்
சிறு நதியொன்றை எனக்கெதிரே
கட்டுமானித்தபின்னரும் பெரும் அவசரத்தில்
வேவ்வேறு வடிவாயானதும் அதன் சப்தத்தில்
உணர்த்திக்கொண்டிருந்தது.
நீள்வெட்டுக் குச்சிகளையும் சருகுகளையும்
தனக்குண்டான வேகத்தின் பொருட்டு
பள்ளத்தின் திசைக்கிழுத்த அதன் செயலில்
மேன்மையின் பெயரே இடப்பட்டிருந்தது.

வெப்பச்சலனத்தை கொன்றுவிட்ட போதும்
வெற்றிக்களிப்பை ஏந்தாதிருக்கும் பொருட்டு
இலகுவான காற்றை நிரப்பி அதன் மீது
வாசனையை அமர்த்தி நிவர்த்தியுற்றது.
கைகளில் நிரம்பி மற்றும் ஒருமுறை
வழிந்துவிடுவதில் சிக்கலொன்றுமில்லை
அதுவே மனத்தின் ஏகப் பிருந்தவனத்தில்
பெரும் நீர்குட்டையாய் தேங்கியிருந்தது.

வேண்டுதல் விரும்பாதிருத்தல் அஞ்சுதல்
அதற்கெனவே கெஞ்சுதல் என தன் பதிலை
குளுமையருளும் தன் கரத்திலனைத்து நம்மை
கேள்விகளற்ற பார்வையாளனாய் சமைக்கிறது.
அதன் நிகரற்ற சப்தத்தில் சலனமற்று கிடந்த
மரங்களின் உத்தரவின்றியே
ஒரு நீண்ட குளியலை நடத்தித் தந்தது.
சற்றைக்கு ஓய்ந்து மீண்டும் ஓங்காரமிட்டு
தனக்குண்டான பண்பென்று ஒன்றையும்
அடைகாக்காது தன்வழியேயான தகமை
விரும்பியாய் பொழிந்தது மழையென்னும் மழை.

சிறு தூறலாய் தன் வருகையிலிருந்து
விடுபட நினைக்கும் அதன் பேரூண்மைக்கு
பின்னால் நான் என் நோட்டுப்புத்தகத்தின்
கிழிக்கப்பட்ட தாளிலிருந்து நேர்த்தியற்ற
கப்பலை அதன் முதுகில் ஏற்றுகிறேன்
மொழிபெயர்த்துக்கொண்டதுபோல்
ஆராவரமற்று தள்ளிக் கொண்டுபோனது
மழை மற்றுமொரு நாள் வரும் வரை
அது மிதந்து கொண்டிருந்தது மனதில்…

எழுதியவர் : வன்மி (18-Mar-14, 12:03 am)
Tanglish : mazhai naal
பார்வை : 132

மேலே