-கருத்திலே பூத்தது--அவேளாங்கண்ணியின் -184096 பாராட்டி

==குறள் பாக்கள்==
01.
தலைவன் தனைத்தொழுவாள் தன்தலை தாழும்
நிலை,எதற்கு? சூர்யகாந்தி! சொல்!

கருத்து:
தனது காதலனாகிய தலைவனின் முன்னே அவனைத் தொழுபவளாகத்
தனது தலையைத் தாழ்த்திக்கொள்கிறாளே(!) தலைவி, அது ஏன் (தெரியுமா)? சூரியனையே நோக்கி நிற்கும் சூரியகாந்திப் பெண்ணே! நீயே சொல்.

02.
மூர்த்தி யவன்பார்த்து முன்வீழ் குறிஞ்சிமலர்
கீர்த்தி பெரிதென்பாள், கேள்!

கருத்து:
தலைவன் அவனைப் பார்த்து, அவன் முன்னால்
விழுந்தவிட்டவளான குறிஞ்சி மலரென்னும் பெண், என்ன சொல்கிறாள் கேட்பாயா? வேறொன்றும் இல்லை அவன் (தலைவன்) பெருமை மிக்கவன், அவனது புகழானது மிகவும் விசாலமானது-ஊரறிந்தது- என்பதுதான்.

03
குறிஞ்சி யவன்மார்பில் கொம்பிலா முல்லை
நெருங்கிப் படர்வதுவே நேர். (நேர்=சரி)

கருத்து:
அவன் மலைபோன்றவன்; அவன் நெஞ்சம் விசாலமானது; பற்றுவதற்குக் கொம்பில்லாத முல்லைக்கொடி போன்றவளான நம்தலைவி, அவனை நெருங்கி நின்று அவன்மேல் சரிந்துகொள்வதுதானே இயல்பு, மற்றும் சரியானதாகும்.
04
பூவினைப் பூப்பறிக்கப் போகுமோ? பூவணைக்கப்
போவானை பார்த்திப் பயம்!

கருத்து:
(பூவினைத்தொட்டாள் ஒரு பெண்) அருகிலுள்ள பூக்கள் காற்றடிக்கப் படபடத்தன! ஒரு பூவை மற்றுமொரு பூ பறித்துவிடுமா என்ன? அந்தப் பயமில்லை பூவிற்கு; அவளருகே நெருங்கி அவளை அணைக்க்ச் செல்லும் தலைவனைப் பார்த்தே அந்தப் பயம் –பூவுக்கு.(அவன் கண் பட்டுக் கை பட்டுவிட்டால் பறித்துவிடுவானே, அவளுக்குச் சூட்ட!)

05
இந்தரோ சாக்களும் இந்திய மக்களோ?
இந்தமண் வாசம் இது!

கருத்து:
இந்த ரோசா மலர்கள் எல்லாம் கூட்டமாகக் கூடிப் பூத்திருக்கின்றனவே(!) ஒருவேளை இவைகளும் இந்திய மக்களைப் போன்றவையோ?(!) (இருக்காதா) அது இந்த மண்ணின் வாசனையாச்சே!

06
பந்தமும் வாசத்தைப் பார்த்து வருமோ?சொல்!
இந்தியனாய் என்றும் இரு!

கருத்து:
உறவு என்று சேர்ந்துகொள்ளும் கட்டுப்பாடு, இனத்திற்கான மணத்தை/குணத்தைப் பார்த்தா தோன்றும், சொல்லு? என்றைக்கும்,எப்பொழுதும் இந்தியனாகவே இரு, இருப்போம்- இனங்களால், அவைதரும் (மணங்களால்)குணங்களால் அல்ல!

---------------++++++ ---------------------- ++++++------------

பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்மையும் எழுத வைக்கும் ஒரு உந்துதலாக அமையும்;

அதற்க்குச் சாட்சியாக மேலே உள்ள கவிதையை நான் எழுத உந்துதலாக -184096-என்ற எண்ணின் கீழ், -திரு.அ .வேளாங்கண்ணி - எழுதியுள்ள கவிதையிருந்தது.

இதுபோன்ற கவிதையின் எண்ணும் கவிஞரின் பெயரும் இதைப் படிப்பவர்கள் அவரையும் சென்று படித்து ஊக்குவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் கொடுக்கப்படுகிறது.

அவருக்கு எனது பாராட்டுகளாக இக்கவிதையை மட்டுமல்ல, எனது நன்றியினையும் சமர்ப்பித்து மகிழ்ந்து கொள்கிறேன்.
==== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Mar-14, 2:02 pm)
பார்வை : 121

மேலே