என்ன பாவம் செய்திட்டாள் இவள்

சொத்து எழுதித்
தந்த உன் தந்தை
உன்னை ஏன்
எழுதித் தரவில்லை
என அன்றாடம் மன்றாடும்
குடிகாரக் கணவனுக்கு
என்னவென்று புரிய
வைப்பது !

அவன் வாங்கிய
வரதட்சணைப் பொருட்களுக்கு
மனம் என்று ஒன்றில்லை !
ஒன்றுக்கும் உதவாதவள்
என இழித்துரைக்கப்
படும் இவளுக்கு
இதயம் என்ற ஒன்று
உண்டென !!

எதிர்த்துப் பேசுதல்
தவறென்று சொல்லி
வளர்க்கப்பட்டவளை எதிரில்
நிற்கக்கூடாதென விரட்டியடிக்கும்
அவனுக்குத் தெரியாததல்ல ,
தான் நிற்கும் நிழல்
அவளுடைய சீதனமே என்று !!

வேலைக்குப் போவது
பெண்ணுக்கு அழகன்று
என்று புத்திபுகட்டும்
யாருக்கும் வாய் வருவதில்லை
ஆறுதல் சொல்லக்கூட !!

கொண்டவன் கோவிலென
கருதிய பொற்சிலையை
கருவறைக்கு வெளியே
நிறுத்துகிறான் !உற்றம்
சுற்றம் உதவிக்கு வருவதில்லை ,
வேலி தாண்டி வெளிவருவது
வேலையற்றது அவர்கட்கு !இது
போனால் பொழுது போகாதே !!

ஒரு நிமிடம் ஆகாது
படிதாண்டிச் செல்ல !!சொல்லும்படி
ஏதும் இல்லாவிட்டாலும் பெருமையுடன்
சொல்லிக் கொள்ள தன்மானம்
கொண்ட தாய்தந்தை முகம்
நினைவில் வாட்டுகிறது !!

என்றாவது தென்றல்
என்னை நோக்கி வீசும் ,
பாலைவன நம்பிக்கைகள் !
கானலாய் கனவுகள் !!

வழிந்தோடும் கண்ணீரைத்
துடைக்க விரல் தேடுவதில்லை
எந்தக் கைகளும் !! இப்படிப்
போராடிப் போராடி வாழ்க்கைப்
போர்க்களத்தில் தொலைந்திட்ட
பூக்கள் எத்தனை எத்தனையோ !!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Mar-14, 6:56 pm)
பார்வை : 229

மேலே