முற்பகல் செய்யின்

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த தேவாலயத்தில் தபசு காலத்தின் மூன்றாம் வார வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஐராவதம் பால் என்ற அந்த போதகர் தனக்கே உரிய வெண்கலக் குரலில் மறையுரை ஆற்றிக் கொண்டு இருந்தா.ர். ஐராவதம் என்றால் இந்திரனின் யானையின் பெயர், பால் என்பது யேசுவின் முக்கிய சீடர்களில் ஒருவர். இந்த இரண்டு பேரையும் இணைத்து என்ன கூத்தடிக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் வெண்மதி ஆலய வாசலிலேயே நின்றிருந்தாள்.

“எவருடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டனவோ, எவருடைய குற்றங்கள் மறைக்கப் பட்டனவோ அவர் பேறு பெற்றவர் என சஙீகீதக் காரன் கூறுகிறான். இந்த உலகம் வேடிக்கை ஆனது. வினோதம் ஆனது. சில நேரங்களில் நமக்குத் தெரிந்த சில நல்லவர்கள் அகால மரணம் அடையும்போது, பாவம் அவருக்குப் போய் இப்படி ஆகி விட்டதே. இந்த கடவுளுக்கு இரக்கமே இல்லையா என நாம் கடவுளை நொந்து கொள்கிறோம். நன்றாக கவனியுங்கள். தோற்றங்கள் ஏமாற்ற வல்லவை. அந்த மனிதன் வெளி வாழ்க்கையில் நல்லவனாக இருந்து இருக்கலாம். ஆனால் அக வாழ்க்கையில் அவனது பாவங்களை கடவுள் ஒருவர் மட்டுமே அறிவார். அதனால் நாம் நமது எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தூய்மையுடன் இருக்க வேண்டும். அதுவே கடவுளுக்கு உகந்த வாழ்க்கை.”

வெண்மதியின் செல்போன் வைப்ரேஷன் மோடில் இருந்தது கொசு ரீங்கரிப்பதுபோல் ஒலித்தது. ”இதோ வரேன் டெல்ல்” எனக் கூறிஅதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் ஆலயத்தை விட்டு வெளியே வந்தவள், தயாராக காத்திருந்த அந்த காரில் ஏறிச் சென்றாள்.

”என்ன ஆயிற்று? என காரை ஓட்டிய வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் கேட்க
”எல்லாம் நல்லபடி முடிந்தது, இருந்தாலும் எனக்கு பாவமாய் இருக்கிறது. பட படவென்று அடித்துக் கொள்கிறது.

“ஹே, ரிலாக்ஸ், கொஞ்சம் குடி” என டாஷ் போர்டில் இருந்து ஒரு குட்டி சப்பை ப்ளாஸ்கில் இருந்த ப்ராண்டியை குடிக்கக் கொடுத்தான்.

வாங்கி ஒரு மிடறு விழுங்கியவள் திரும்பிக் கொடுத்தபோது அதனை வாங்கி அவன் காலி செய்தான்.
”இன்னும் உன் முகம் பேயடித்ததுபோல் வெளிறிப் போய் உள்ளது. ரிலாக்ஸ்” என அவளை சேர்த்து அணைத்துக் கொள்ள அவள் பக்கம் கையை நீட்டியபோது

எதிர் பக்கத்தில் இருந்து வந்த டான்கர் லாரி மோதியதில், குப்பென தீப்பிடிக்க, இருவரும் அடையாளம் தெரியாமல் சாம்பல் ஆயினர்.

ஒரு வாரத்திற்கு முன்னர்…..

உலகமே உறங்கிக் கொண்டு இருந்தது. “ஆன் த டாட் பிஸினஸ் சொல்யூஷன்ஸ்” அலுவலக நிர்வாக இயக்குனர் ஆகிய நாகநாதன் மட்டும் அவனது அறையில் உலவிக் கொண்டு இருந்தான். கைகளைப் பிசைந்து, மண்டையைக் குழப்பி ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக “யெஸ்” என காற்றில் இரு கைகளையும் மடக்கி பம்பு அடித்தான். அவன் மனதில் பயங்கரமான ஒரு கொலைத் திட்டம் உருவானது.

அவன் “ஆர்பிமெண்ட்” எனப்படும் ராஜ மஞ்சளை தேர்வு செய்தான். அந்த காலத்து ராஜாக்களின் கதையை முடித்த ராஜ நஞ்சு. ஆர்செனிக் ட்ரைசல்பைடு எனும் கொடிய விஷத்தின் கிரிஸ்டல் அது. அவனது நண்பன், ம்யூசியம் க்யூரேட்டர் ஒருவன் வாயிலாக அதனை வாங்கி வந்தான். சர்க்கரை உருவில் மஞ்சள் வண்ணத்தில் கொஞ்சம் பூண்டு வாசம் வீசியது. அந்த பூண்டு வாசம் அந்த பேயை ஒழிக்க சரியானதுதான். அவ்வாசம் தூக்கலாய் இருப்பதை மறைக்க, பூண்டு அதிகமாய் போட்டு சமைக்கும் சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கலந்து கொடுத்து விட்டால் யாருக்கும் சாப்பிடும்போது சந்தேகம் வராது. சத்தமின்றி கதை முடிந்துவிடும்.

அதனைச் சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தேகத்தில் “ஹைபோவாலமியா” படர ஆரம்பிக்கும். இந்த நிலையில் அவளது மெழுகு போன்ற வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக தன் அசல் வண்ணத்தை இழக்கும். இறுதியில் நீலம் பாரித்து இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மூர்ச்சை ஆகி விழுந்து விடுவாள்.…….. ஆனால் கொலை எனத் தெரிந்து விடுமே!. தெரியட்டுமே… அதனால் என்ன… செய்தது தெரியாமல் இருக்க அலிபி உருவாக்கி விட வேண்டும்.

அவன் கொலை செய்ய நினைத்தது அவனது மனைவியைதான். பெயரளவில் மனைவி.. இப்போதோ வெள்ளைக் கார கம்பெனி ஓனருக்கு வைப்பாட்டி. துரோகம். சாதாரண துரோகமா? அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் புகாரிட்டு, மூன்று மாதத்தில் அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்க நோட்டீசுக்கும் ஏற்பாடு செய்தவள் ஆயிற்றே. இவளா அவன் மனைவி?. அவன் பத்தாம் பசலியாம். சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் கூட செய்ய லாயக்கு இல்லாதவனாம். அவளுக்கு அவளது அம்மா சப்போர்ட். அவள் கதை முடிந்த பிறகு அந்த நோயாளி அம்மாவுக்கு அவளது இன்சூரன்ஸ் பணத்தை கொடுத்து விட்டால், ”மாப்பிள்ளை போல்” வருமா என அவனுக்கு நற்சான்று கொடுப்பாள். ஆகட்டும் அடுத்த விடுமுறை ”தான்க்ஸ்கிவிங் டே”க்குதான். அன்று பாட்ச் அப் செய்வது போல தாஜா பண்ணி அவளைக் கூட்டி வந்து சாப்பிட வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்.

’தான்க்ஸ்கிவிங் டே’ வந்தது. காலை முழுவதும் வீட்டிலேயே வேலை செய்தவன், மதியம் தூங்கிப் போனான். மாலை 6.00 மணிக்கு. கொஞ்சம் தெம்பு வர வேண்டும் என இரண்டு பெக் குடித்தான். இரவு எட்டு மணி ஆகி விட்டது.

“ அம்மா வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டேன், இதோ வந்து விடுவேன்” என அவள் போன் செய்தாள். ரிசீவ்ட் கால்ஸ் லிஸ்டை தேடி அவளது எண்ணை அழித்து விட்டான். அவள் வருகிறாள் எனும் சந்தோஷத்தில் மேலும் ஒரு பெக் ஊற்றிக் கொண்டான்.. கொஞ்சம் ரெட் ஒயினும் எடுத்து மேஜை மேல் வைத்து விட்டு, தனித் தனி தட்டுகளில் “தயாராக” வைத்திருந்த உணவையும் --அவளுக்கு, தனக்கு என நகர்த்திக் கொண்டான். எதிர் எதிரில் இருந்தால்தான் முகத்தையும் முகம் காட்டும் உணர்ச்சிகளையும் கவனிக்க முடியும். சிகரெட் ஒன்றை பற்ற வைத்து டீ..வி. யை ஆன் செய்தபோது,

“எல்லாம் ரெடியா இருக்கா? எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.
வந்தவள் தனித் தனித் தட்டுகளில் உணவு ஏற்கெனவெ எடுத்து வைத்து இருப்பதை சந்தேகமாய் பார்த்தாள்.
“ நம்ப ஆண்டனி வாங்கி வந்தான். நல்ல பையன், எனக்கு வேலை கொடுக்க கூடாதுன்னு எல்லாத்தயும் பிரிச்சு தட்டில் பறிமாறி வைத்து விட்டான். உனக்கு கொஞ்சம் ஒயின் தரட்டுமா?

“ம்ம். வித் ப்லெஷர்.” ஆயினும் அவள் பார்வை இரு தட்டுக்களையும் அவற்றின் மீதிருந்த உணவையும் விட்டு நீங்கவே இல்லை. அந்த நேரம் பார்த்து ஒரு போன் கால். எல்லாம் பாழாய்ப்போன வெள்ளைக்கார முதலாளிதான். சிக்னல் கிடைக்காததால் அறையை விட்டு வெளியேறி, மொட்டை மாடியில் நின்று பேசி விட்டு திரும்பி வந்தபோது….

அவள்....முகத்தையே ஆராய்ந்து பார்த்தான்.

அவள்…மிகச் சந்தோஷமாக,அவன் மீது எவ்வித வெறுப்பும் இல்லாதவள்போல்,
“போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வாருங்கள். எல்லாம் ஆறிப் போய் விடும். சீயர்ஸ்” என அவன் டம்ளரைத் தட்டினாள்.


”யாருடைய போன்” அவனை உற்சாகப் படுத்திடக் கேட்டாள்.

“டெல்ல்தான். எனக்கு கொடுத்த நோட்டீசை ரத்து செய்து விட்டானாம். மூன்று மாதம் முடிந்தாலும் நான் தொடர்ந்து வேலைக்கு வரலாம் எனக் கூறினான். எல்லாம் உனது ரெக்கமண்டேஷன்தான். தான்க்ஸ் டியர், லெட் அஸ் செலெப்ரேட் திஸ்”

இன்னொரு பெக் ஊற்றினான். நான்காவது ரவுண்டு ஆகி விட்டதாலும் வயிறு காலியாக இருந்ததாலும் , அவசர அவசரமாக தட்டில் இருந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டான். வெண்மதிக்கு இந்த செய்தி புதியது இல்லைதான் அவளிடம் சொல்லாமலா எனக்கு அவன் நல்லது செய்வான். . ஆயினும் , அவளுக்கு ஏனிந்த திடீர் உற்சாகம் என அவன் குழம்பி மேஜையைப் பார்த்த போது அவன் வைத்தபடி இல்லாமல் தட்டுக்கள் இருந்த இடம் தலை கீழாக மாறிப் போய் இருந்ததை குடி போதையில் கவனிக்காமல் விட்டது அப்போதுதான் தெரிந்தது.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (21-Mar-14, 11:40 am)
Tanglish : murpakal seiyin
பார்வை : 217

மேலே