ஆசிரியருக்கு

விளையாட்டுப் பாடவேளை உண்டு
ஆனால்,
விளையாட்டு மைதானம் இல்லை.
உங்களுக்குத் தெரியும்,
கிரிக்கெட்டால் மண்டை உடைபட்ட
கிழவிமார்களுக்குத் தெரியும்,
வீதியெல்லாம் எங்களுக்கு
விளையாட்டு மைதானங்கள்தானே.

வீட்டிலிருந்து புகார் வரும்-
ஒரே விளையாட்டென்று.
பதிலளிப்பாய்-

விஞ்ஞானம் மட்டுமல்ல,
விளையாட்டும்கூட கல்விதானே என்று.

குளிக்கவில்லை என்று புகார் வரும்.
'பார்க்க அப்படித் தெரியவில்லையே...'
இதுதான் உன் பதில்.
கோவிலுக்குப் போகவில்லை
இது புகார்.
கோவிலில் மட்டும் தெய்வம் இல்லை
இது உன் பதில்.

பள்ளிக் கள்ளன் என்னைப்
பள்ளியின் கள்வன் ஆக்கியவனே,
உன் மண்ணாங்கட்டி square
இன்னும் மண்டையைவிட்டுப் போகவில்லை.

அகரம் படிக்கும்போதே எனக்கு
ஆசிரியப் பயிற்சி அளித்தவரே,
உம் ஆத்ம தாகத்தால் நான்
வாத்தியார் ஆகிவிட்டேன்.

கதை கதையாய்ச் சொல்லி எம்மைக்
கரை சேர்த்து விட்டவரே,
உமக்குக் காணிக்கை எனக்கொணர
கையாலாகி நிற்கின்றேன்.

ஓர் நாள்,
குடும்பத்தோடு வந்து
குசலம் விசாரித்தேன்-
என்னைத் தெரிகிறதா என்று.
எண்பது கடந்த உனக்கு
எப்படித் தெரியும்?
என்னைப்போல் எத்தனைப்பேர்
கேட்டனரோ இப்படி?

மற்றொரு நாள்,
சாலையில் பார்த்தேன்.
சந்திக்கக் கூட மனமில்லை
சடுதியில் சென்றுவிட்டேன்

என் புறமுதுகைப் புண்படமட்டுமல்ல,
பண்படவும் தட்டியவனே,
பாவம்,
உனக்குப் பார்வை இல்லை
எனக்குப் பக்குவம் இல்லை.

எழுதியவர் : ஆன்றிலின் (25-Mar-14, 11:40 am)
பார்வை : 3706

மேலே