சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 7
7.
எவ்வளவு நேரம் கியூவில் நிற்கவேண்டுமோ .. தெரியவில்லையே !
ஓராண்டு காலம்.
என்ன .. ஓராண்டு காலமா
ஆம்
அதுவரை இப்படியே சுமந்துகொண்டு தான் நிற்பீர்களா என்ன
ஆம் .. வேறு வழி
முன்னும் பின்னும் நிற்கும் கிங்கரர்களிடம் சொல்லிவிட்டு என்னை வேறெங்காவது அழைத்துச் செல்வீர்களா ?
இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி.?
பூவுலகில் மனிதனாகப் பிறந்திருந்தாலும் நான் உலகம் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் எமலோகத்தையாவது சுற்றிப்பார்க்கும் ஆசை தோன்றியது.
மானுடா ! ஓராண்டு காலம் என்று ஒரு குத்துமதிப்பாகத்தான் சொன்னேன். உன் சந்ததிகள் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்களேயானால் வெகு நாட்கள் கியூவில் நிற்கவேண்டியதிருக்காது.
அப்படியா ! அப்படியென்றால் என் சந்ததிகள் இரண்டு பெண்களே. மகன் பிறக்கவில்லை. பெண்கள் பித்ரு கர்மங்கள் செய்யும் தகுதியை இந்து மதமும் வேறெந்த மதமும் கொடுக்கவில்லையே. கருட புராணத்திலும் அவ்வாறே சொல்லியிருப்பதாக ஞாபகம் ! அப்படியென்றால், நீங்கள் என்னை சுமந்துகொண்டு இங்கேயே நின்றுகொண்டிருக்க வேண்டியது தான்.
நீ ஒரு மடையன் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த முயற்சி செய்கின்றாயோ .. தெரியவில்லை.
ஆண் பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ .. ஒருவரின் பூர்வ ஜன்ம பலன்களால் கிடைப்பது, ஆண் மரபணு, பெண்மரபணு என்று வெவ்வேறு இருப்பினும் எவ்வணு எவ்வணுவுடன் சேரும் என்பதை யார் நிர்ணயிப்பது.
விஞ்ஞானம் முன்னேறி ஒருநாள் இது சாத்தியப்படலாம் என்றாயினும், ஒவ்வொரு மனிதர்க்கும் இது சாத்தியமா என்றும் சிந்திக்க வேண்டும்.
உலகில் பணம்படைத்தவ்ர்கள் சிலருக்கு வேண்டுமானால் அது பயன் பாடலாமே தவிர, உலகிலுள்ளோர் அனைவருக்கும் அது சாத்தியமல்ல.
மேலும் அவ்வாறு உருவாகும் .. இல்லை உருவாக்கப்படும் உயிர்கள் .. மரணத்தை வென்று விடுவார்கள் என்பதற்கு யார் உத்திரவாதாம் தருவார்கள் ?
- வளரும் -