விடையில்லா கேள்வி

எனக்கு அந்தப் பூங்கா மிகவும் பிடித்தமான ஒன்று . மாலை ஆறுமணிக்கு மேல் என்னைத் தவறாமல் அந்தப் பூங்காவில் காணலாம். அந்தக் காதல் புறாக்களையும் காணலாம்.அழகா வெட்டி விடப்பட்ட அந்தச் சவுக்கு மரத்தின் அடியில் கிடக்கும் சிமெண்ட் இருக்கையில் அவர்களின் காதல் நாடகம் நடக்கும். வெளிச்சமும் அங்கு குறைவு. இந்த உலகத்தைப் பற்றியோ ,பூங்காவில் உலாவும் மற்றவர்களைப் பற்றியோ துளியும் கவலைப் படாத இளம் காதலர்கள். தனி உலகம் எனும் எண்ணம்.
என்ன பேசுவார்ளோ? ஒரே சிரிப்புதான். அவள் கைகளை அவனும், அவன் கைகளைஅவளும் இதமாகத் தடவிக் கொடுத்துக் கொள்வார்கள். மிகவும் நெருக்கம்...
இருவருமே சந்தன நிறம். எடுப்பான தோற்றம். அவன் அணிந்திருக்கும் கண்ணாடி, அவனது முகத்தோற்றத்தில் ஒரு வசீகரத்தைக கொடுத்தது.
அவள் கூந்தல் சுருள் சுருளாக , அவளது பின்னழகைத் தடவிக் கொண்டு கிடந்தது.
மூக்கோடு மூக்கு உராய்கிறது.மங்கலான வெளிச்சம். இதழ்களின் சங்கமம் எனத் தோன்றுகிறது.
கண்கள் தடையின்றி கவனிக்கின்றன. மனமோ தவறு என இடித்துக் காட்டுகிறது.
இடமில்லா குறையா? ஏன் இங்கு வந்து இப்படி? யாருக்குத் தெரியும்? ஒருவேளை திருட்டுக் காதலோ? திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமாயிற்றே . மனதில் எண்ண ஓட்டங்கள்.
ஒரு மாத காலமாக இதே நாடகங்கள். முடிவு! எதிர் நோக்கி இருக்கிறேன். இந்த இலவச சினிமாவைக் காண்பதற்காகவே சிலர் தினமும் ,அதே நேரம் வருகின்றார்கள் என்னைப் போலவே! இதில் என்ன இன்பம். அதுதான் எனக்கும் தெரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சுக உணர்வு ஏற்படுகிறது. அதோடு இனம் புரியாத ஒரு ஆர்வமும் எழுகின்றது.
ஆனால் எங்களைப் போன்றவர்களைப் பற்றிய அச்சமோ, நாணமோ ,கூச்சமோ அந்த இளசுகளுக்கு இல்லை. இருந்திருந்தால் இங்கே வருவார்களா?
அன்று மேக மூட்டமாக இருந்தது.. அறு மணிதான் ஆயிற்று. ஆனால் எட்டு மணி போலும் ஒரு இருட்டுத் தோற்றம். ஏதோ சிந்தனைகளில் மிதந்தவனாக நடந்து வருகின்றேன்.
திடீரென கலகலவென்று சிரிப்பு. முன்னால் பார்க்கிறேன். காதல் புறாக்கள். என்னை அவர்கள் கவனிக்கவில்லை.கவனித்தாலும் என்ன ? அவர்கள் கவலைப்படவா போகிறார்கள். அரையும் குறையுமாக எனது காதுகளில் சில வார்த்தைகள்.
'அன்பே ! உனக்கு 'இது' வேணுமா?'
உள்ளங்கையினை அதரங்களில் வைத்துக் காட்டுகிறான்.
தலையினை வேண்டாம் என்பதுபோல் அசைத்த அவள், தனது கழுத்தைத் தொட்டு காட்டுகிறாள்.
'காலங்கள் கனியவில்லை கண்ணே!'
வருடங்கள் எத்தனை ஆகும்'
அவள் கன்னத்தைக் கிள்ளி ,எதுவோ சொல்கிறான். எனக்கு எதுவும் கேட்கவில்லை.
'ஐயோ ! 'வலியால் மெல்லிய கத்தல். இனிமையாகத் தான் இருந்தது.
ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டே வந்து ,வழக்கமாக அமரும் இடத்தில் அமர்கின்றார்கள்.
வானம் ஏனோ அன்று இருண்டு கொண்டே வந்தது. மழை இப்போ, இதோ வென்று பயமுறுத்திக் கொண்டேஇருந்தது. நல்லவேளை என்னிடம் குடை இருந்தது..
மழை வரும்போல் இருக்கிறதே ! ஆனால் வீட்டிற்குச் செல்ல எண்ணம் வரவில்லை . ஏன்?
எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் உலகத்தில் புகுந்து விட்டார்கள் அவர்கள் .கண் மயங்கும் இருட்டு. எங்கோ இடி முழக்கம்!. மின்னல் ! நெருக்கம் .நெருக்கம். கண் கூசியது! மின்னலா ? எனக்கு விளங்கவில்லை.
மழைத் தூறத் தொடங்குகிறது. குடையினை விரித்துப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிட இடம் தேடி, ஒரு அடர்ந்த மரத்தை நோக்கி நடக்கின்றேன். பூங்காவில் இருந்த சிலரில் பலர் ஓடத் தொடங்கினார்கள்.
அந்த இணை ! எதையுமே உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இடி! மின்னல்! அந்த வெளிச்சத்தில் அந்த இருவரின் நெருக்கம். அடுத்து என்ன?
மனம் ஏனோ? திக் ! திக்கென அடிக்கிறது. உடம்பிலே ஒரு சூடு பரவுகிறது. பயமா? புரியவில்லை.ஆனால் ஏதோ இனம் தெரியாத உணர்வு.
பளிச்சென ஒரு பெரும் மின்னல்! கண் சிமிட்டிய ஒன்றிரண்டு மின் விளக்குகளும் அணைந்து விட்டன. ஒரே இருட்டு. எதுவே தெரியவில்லை. மழை வலுத்து விட்டது.
ஒரு பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும். மழை ஓரளவு தணிந்தது. திடுமென ஒரு இடி! அதனைத் தொடர்ந்து கண்களைக் குருடாக்கும் மின்னல். அதோ அந்த இணை. என்ன இது அலங்கோலம். ஆடைகள் சரிந்த நிலை. தொப்பலாக நனைந்து விட்டதுதான் காரணமா?
ஏன் நனையணும்? என்ன நடந்தது? ஒரு வேளை அது..அது.. என் மனம் ஏனோ காரணமில்லாமல் பலமாக அடித்துக் கொண்டது.
மின்சாரம் உயிர் பெற்றது.கும்மிருட்டில் இலேசான ஒளிக்கீற்று ஊடுருவியது. அந்த இணை ஒட்டிய ஆடைகளோடு ,ஒட்டிக் கொண்டே நடக்கின்றது, மழை நின்று விட்டது.
பாதி நனைந்த உடலோடு நானும், நடந்து செல்கின்றேன்.பாவம் அவர்கள் முழுக்க முழுக்க நனைந்து விட்டார்கள் போலும்.
மழை என்றால் எனக்கு ஆகாது. அடுத்த மூன்று நாட்கள் நல்ல ஜலதோசம். காய்ச்சல்.
ஒரு வாரம் ஓடிவிட்டது.
அன்று மீண்டும் பூங்கா சென்றேன். மணி ஏழு, எட்டு ஆகிவிட்டது. அந்த இணையினைக் காணவில்லை. ஏன்?
எனக்கென்ன தெரியும். ஒருவேளை அவர்களுக்கும் ஏதாவது நோய் வந்துவிட்டதோ? நிச்சயம் வரக்கூடாது.
ஒரு மாதத்திற்கு மேல் சென்று விட்டன.இணை வரவே இல்லை. என்ன நடந்து இருக்கும். ஒரு வேளை மணம் முடிந்து தேனிலவு சென்றிருப்பார்களோ?
அதோ ! அதோ ! அது யாரு?
என்ன இது? அந்தப் பெண்புறா மட்டும் தனியாக வருகின்றதே? முந்தைய உற்சாகம் கூடக் காணப் படவில்லையே? சோகமாகத் தெரிகின்றாளே! நடையிலே ஏன் இந்தத் தள்ளாடல்.தள்ளாடி வந்து அதே இடத்தில் அமர்கின்றாள். அர்த்தமில்லாமல் கூந்தலை அவிழ்க்கின்றாள்.பின்பு கட்டுகின்றாள். அந்தப் பெஞ்சினை மெதுவாகத் தடவிக் கொடுக்கிறாள்.
விரக்தியா சிரிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்கிறாள். ஏனோ? கூந்தலை முடிந்து கொள்ளவில்லை. அடர்ந்த கூந்தல் காற்றிலே அலைமோதுகிறது.
சாலைக்குப் போய்விட்டாள்.
'அம்மா!' எனும் பெருங்குரல்.
செங்கல் லாரி ஒன்று தடதடவென்று வேகமாக ஓடி மறைகிறது.
பூங்காவில் இருந்தவர்கள் எழுந்து ஓடுகின்றார்கள். நானும் ஓடினேன். அங்கே இரத்த வெள்ளத்தில் அந்த ஒற்றைப் புறா. என் கண்கள் என்னை அறியாமலே கலங்கின.
'பாவம் . யார் பெற்ற பெண்ணோ?' எனும் பரிதாபக் குரல்கள் என் செவிகளில் நுழைகின்றன.
ஏதோ ஒரு இனம் தெரியாத துக்கம் என் மனதைச் சூழ்கிறது. தொண்டையினை எதுவோ அடைப்பது போலும் ஒர் உணர்வு.
'தற்கொலையா? தற்செயலா? ' விடை இல்லாத கேள்வி ஒன்று என் உணர்வுகளில் ஊர்ந்து செல்கின்றது.
******************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (28-Mar-14, 7:22 pm)
Tanglish : vidaiyillaa kelvi
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே