நாம் தமிழர் - கே-எஸ்-கலை

கவிதை செய்வோம் !
கதையும் செய்வோம் !
எழுதிய மை
காயும் முன்னே
எழுதிய பொருளுக்கு
எதிராய் நடப்போம் !

பழமை
போற்றுவோம் !
பெருமை
பீற்றுவோம் !
மடமை மட்டுமே
மண்டையில்
ஏற்றுவோம் !

ஆக்கம் மறப்போம் !
ஊக்கம் இழப்போம் !
அறிவைக் கெடுத்து
அகாலம் செல்ல
அச்சம் தவிர்ப்போம் !

மொழி இருந்தும்
பிச்சையெடுப்போம் !
விழி இருந்தும்
குழியில் வீழ்வோம் !

பெண்ணியம்
போற்றுவோம் !
வேதனமாய்
சீதனம்
வாங்குவோம் !

மூடத்தனம்
எங்களுக்கு
மூலதனம் !

மதம் படிப்போம் !
மதம் பிடிப்போம் !
சாதி மறவோம் !
மோதி இறப்போம் !

சினிமா போவோம்
சீரழிவோம் !
தலைவன் சிலைக்கு
பால்குடம் ஊற்றுவோம் !

கஞ்சா அடிப்போம் !
சரக்கும் அடிப்போம் !
தட்டிக் கேட்டால்
வெட்டிக் கொல்வோம் !

வன்முறை அணிவோம் !
வல்லுறவு துணிவோம் !
சம்பாதிக்க வேண்டுமா
"சாமியாராய்" ஆகு என்போம் !

காட்டிக் கொடுப்போம்
கூட்டிக் கொடுப்போம்
கஷ்டம் வந்தால்
கட்சி தொடங்குவோம் !

மேடை ஏறி
சங்கே முழங்கென்போம்
மேடையில் இறங்கி
சங்கே ஊதுவோம் !

சொந்த நாடு
பற்றி எரியும் போதும்
பீடி குடித்துக் கொண்டு
குமரி கண்டத்தில்
குந்தி இருப்போம் !

செய்வாய்க்கு
எவனோ போவான் -அவன்
அங்கேதும் கண்டெடுத்தால்
அது - எங்கள் தாத்தனின்
கோவணம் என்போம் !
வாசலில் நின்று கூட
வானத்தைப் பார்க்கமாட்டோம் !

நன்மையை சொன்னால்
நரகல் என்போம் !
உண்மையை சொன்னால்
உளறல் என்போம் !
நரகத்தின் பிணவாடை
நமக்கு மட்டும் பூவாடை !

------------------------------------------தொடர்வோம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Mar-14, 8:51 pm)
பார்வை : 245

மேலே