அக்கா
கையில் பிரம்போடு
வெற்றிடம் அடிக்கும்
வெகுளியாய்,
பப் கை வைத்த
சட்டையும்
பாவாடை தாவணியில்
நெடு நெடுவென
வளர்ந்தவளாய்,
மல்லிகை வாசத்தோடு
மணக்கும் மயக்கும்
பேச்சும், பார்வையும்
கொண்ட மத்திய தர
வர்க்கத்தின் மகளாய்,
கதை சொல்லி,
கதை கேட்டு
கனவுகளை வளர்த்து
விதைத்து,
"இதுக்கு போயா..?"
என்று,
தன் துணிகளுக்கிடையில்
வைத்திருக்கும்
பத்து ரூபாயை
சட்டென
எடுத்து தருபவளாய்,
காரணமே சொல்லாமல்
அழும் போது,
கட்டியணைத்து,
கண்ணீர் துடைத்து
யாரு மற்ற முத்தத்தை
பதிப்பவளாய்,
கட்டிக்க போகிறவர்
வரும் நாளுக்காய்
பொய் கோபம் காட்டி
காத்திருக்கும்,
வெட்கம் மறைத்தவளாய்,
மனம் முடித்து
போகையில்,
சொல்லொணாத் துயரத்தை
வெற்றுப் பார்வையில்
தந்து விட்டு - என்
தலை முடி ஒதுக்கி,
கன்னம் தடவி,
திரும்பி திரும்பி
பார்த்து செல்லும்
இப்படி ஒரு அக்காவை
நம் எல்லாரும்
எங்கேனும் எப்படியேனும்
கடந்தே வந்திருப்போம்....
செலவழிக்காமல்
புத்தகத்துக்குள்
மௌனித்துக் கிடக்கும்
அந்த பத்து ரூபாய்
இனம் புரியாத
கண்ணீரை
சேமித்துக் கொண்டே இருக்கிறது...
எனக்கும் எவர்க்கும்...