வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 3
"தேவா சுப்பையா" வின் முதல் சிறகால் தன்னை
அலங்காரம்செய்தபடிதுவங்குகிறது..."அலகுகளால்
செதுக்கிய கூடு". "அந்திமம்...துவங்கி முரண் " வரை எட்டு சிறகுகள்.
என்னைப் பொறுத்த வரை..
அந்திமத்தில் துவங்குவது...முரண் இல்லை. ஒரு வகையில்..அது இன்னொரு வாசலின் நுழை வாயில்.
கவிஞருக்கு ஒரு நல்ல நூலின் மூலமாக அறிமுகம்
கிடைத்தாற் போல. என்னைப் போலவேதான்
தொகுப்பாசிரியரும் நினைத்திருக்கக் கூடும். (இந்த இடத்தில்...தேவா சுப்பையா என் கவிதைகளுக்கு இதுவரை..."லைக்ஸ்" போடாத வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.)
இந்தத் தொகுப்பில் உள்ள தேவா சுப்பையாவின்
கவிதைகள்...வாழ்வின் மீதான கேள்விகளை...
வரி எங்கும் வீசிச் செல்கிறது..."சுவாசம் தப்பப் போகும்
நீண்ட இரவொன்றில் " கூட. அடுத்த கணத்தின்
நகர்தல் பற்றி...பகுத்தறிவுக்கும் தெரியாத நிலையில்..தீராது என்றெண்ணிய வாழ்க்கை...
விடியலைக் காணாமலே முடிந்து போகும்
அவலத்தைச் சொல்கிறார். எனக்கேனோ...சொல்லத் தெரியாமல் ...நாம் கொண்டாடும் நம் தேசத்தின் சுதந்திரம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..."இரவிலே வாங்கினோம்...இன்னும் விடியவே இல்லை..." என்னும் அரங்கநாதனின் அற்புதமான வரிகளும் கூட.
"ஆழி சூழ் உலகு" (இந்த வருடம் சாகித்ய அகாடமி விருது வென்ற ஜோ.டி.க்ரூஸின் முதல் நாவலின் தலைப்பு இது) கவிதையில்...கடவுள்களின் ஆசைகள் சிரச்சேதம் செயப்பட்டுவிட...வழியும் கடவுளின் கண்ணீரின் கரிப்பில்..."ஆழி சூழ் உலகம் "
மிதப்பதைச் சொல்கிறார் கவிஞர். அவர் குறிப்பிடும் கடவுள்...இந்தத் தேசத்தின் வாக்காளப் பெருமக்கள்...என்பது படிக்கும் உங்களுக்கும் நிதர்சனமாகவே புரியக் கூடும்.
பின்னொரு கவிதையில்..."மூக்குடைந்த பேனாவிலிருந்து வர மறுக்கும்" கவிதைகள் குறித்து எழுதுகிறார்...அதனால் என்ன? அவர் கவிதைகளின் கேள்விகளால் நம் மூளையினூடே
வெடித்துச் சிதறுகிறதே...நிகழ் காலப் பொய்கள்.
கரடு முரடான வாழ்க்கையின் பாதைகளைக் கேள்விக்குள்ளாக்கும் தேவா சுப்பையாவின் கவிதைகள்...அறியாத பக்கங்களைத் திறந்து தருகின்றன...
படிக்கலாம் கவிதையாக...
ஏற்கலாம் வாழ்க்கையாக.
இறுதியாய்...
தேவா சுப்பையா...
"யாரென்று எனக்குத் தெரியாது...
நான் யாரென்று அவருக்குத் தெரியாது...
அதனால் என்ன?
அவரின் கவிதைகளைப் படிக்கையில்...
நான் கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்து போகிறேன்...
பிறகு...மொத்தமாய்க் கரைந்து போகிறேன்..
உண்மையான கவிதை என்பது...
வாசிப்பவனுக்குத் தரும் அனுபவம் .....
அதுதானே?
காலத்தின் துணையோடு மீண்டும் வருவேன்.