வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 5
"அலகுகளால் செதுக்கிய கூடு " தொகுப்பில்
தன் பங்களிப்பாக எட்டு கவிதைகள் அளித்துள்ளார்
ரோஷன்.
1) அடக்குமுறை
2) அலகுகளால் செதுக்கிய கூடு
3)ஓவியத்தின் குமுறல்
4)தொலைந்து போவதென்னும் வாழ்வு
5)முட்டைகளின் ஓடுகளிலான வாழ்க்கை
6)பசியின் வலை
7)பூக்களைப் பாடுகிறேன்
8)விருட்சத்தின் முகம்
என்னும் எட்டுமே மனிதன் தன் வாழ்வின் கூட்டிலிருந்து எடுத்தெறிந்து விட்ட எட்டு உயிர்ச் சுள்ளிகளைப் பற்றிப் பேசுகின்றன.
அடக்குமுறையில்...இந்த நூற்றாண்டிலும் பெண் குறித்தான ஆண் இனத்தின் அவலப் புரிதல்களை
எளிய, வலிமையான வார்த்தைகளில் சொல்கிறார்
ரோஷன்.
" என் மொத்த எடையில்..
மூன்றிலொரு பங்கு மாமிசம்
சிறிதளவு எலும்பு...நரம்பு...கூடுகள்...
கூடவே கொஞ்சம் குருதி...
புடைத்த மார்பு, பொதுவான நிறம்
பிள்ளைகளைப் பெறக் கூடிய பேறு
இவையனைத்தும் இடம் பெற்றவள்தான்
பெண்டாட்டி என்று
புரிந்து வைத்திருக்கிறாய்...."
மெத்தப் படித்தவர்கள் நாட்டில் நிறைந்து விட்டாலும்...ரோஷனின் கருத்தின் உண்மையின்
ஆழத்தை, செய்திதாள்களும், மெகா சீரியல்களும்,
சினிமாக்களும், நமக்கு தினம்தோறும் நினைவுபடுத்திய படியேதான் இருக்கின்றன.
அலகுகளால் செதுக்கிய கூடு...களில் தலைமுறைகளின் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துக் கொன்றுவிட்ட சந்தர்ப்பவாதிகளைக்
குறித்துச் சாடுகிறார் ரோஷன்.
"தேன் கூடுகளைக் கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டுக் கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது...
....வம்சத்தின் வரலாற்றை..."
ஆனாலும்...காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரோஷன் தன் இனத்திற்கு நம்பிக்கையூட்டும் வார்த்திகளால் இந்தக் கவிதையை முடிக்கிறார்...
"காலத்தைத் திரும்பிப் பார்த்து...
கைச் சேதங்களைக் கணக்கிடும் போது
நிராயுதபாணிகளாய் நிற்பீர்கள்...
எதுவுமற்று ஏதிலியாய்க்
குற்றவாளிக் கூண்டில்..
அப்போது நான்...
அலகுகளால் தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்..."
கவிஞனின் பெரும் நம்பிக்கையே...காலம்தான்.
அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல்வதற்காகத்தான் கவிதை அவன் கையில் ஆயுதமாகிறது.
பெரும் நம்பிக்கையைச் சொல்லும் ரோஷனின்
மற்ற கவிதைகள் பற்றிச் சொல்ல...
மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு.