எழுத்துகாம் ஒரு விமர்சனம்

ஊக்குவிப்பு ஊற்றுக்கண் -------- 2

சங்ககால தமிழ் நடைக்குப் பின் தமிழில் புதிய வடிவமும் எளிய வாசிப்புப் பரப்பையும் உண்டு பண்ணியவர் பாரதியார். பார்ப்பனராகப் பிறந்திருந்தும் சாதிகளை அழிக்கச்சொன்ன சத்தியக் கவி பாரதி.

நாட்டுக்கு நல்லது காண “உண்மை தெரிந்து சொல்வேன்” என்ற போக்கை, மானுட நேசிப்பை நோக்கமெனக் கொண்டு வாழ்ந்தவர் பாரதியார். எனவேதான் அவரால் “புதிய கோணங்கி, காக்கைகுருவி எங்கள் சாதி, படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்..., புதிய ஆத்திச்சூடி, நெஞ்சு பொருக்குதில்லையே, பகை நடுவில் பரமன் வாழ்கின்றார்... என்றெல்லாம் எழுத முடிந்தது.

இவரின் அடிச்சுவடு பற்றி பாவேந்தரும் “கொலைவாளினை எடுடா என்றும்”, "மண்ணில் நீயும் ஒரு மனிதன் -மண் அன்று " என்றும் பாட தமிழ் ஒரு புதிய பரிணாம வலைக்குள் சிக்குண்டு சீர் பெற்று உயர்ந்தது...

பின்னாளில் வானம்பாடி இயக்கத்தினரும் வளர்தமிழுக்கு வனப்பும் வீரியமும் மானுட சிக்கல்களுக்கு கலகக் குரலும் அளித்தனர். வானம்பாடி இயக்கத்தினர் உரத்த சிந்தனையும் புதிய முழக்கமும் அளித்தப் போதும் எதிர்குரல் கேட்கவே இல்லை என கூற முடியாது. இன்குலாப், காமராசன், அப்துல் ரகுமான், தமிழன்பன், பிரபஞ்சன், சிற்பி , புவியரசு போன்றோர் எழுத்துக்கள் வீரியம் மிக்கவை. பகுத்தறிவு சிந்தனை, ஆண்டான் அடிமை சிதைவு, ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஓங்கார முழக்கம், மூடத்தன நம்பிக்கை அழிப்பு, இறை மறுப்பு போன்றவைகள் பாடுபொருட்களாய் பவனி வந்தன.

இப்பாடுப் பொருட்களை எதிர்த்து எதிர்குரல் எழாமல் இல்லை; அன்றியும் மானுடப் பகைமை எதிர்குரல் எழுப்பியோர் மத்தியிலும் படைப்பாளிகள் மத்தியிலும் இல்லை என்பதே இருசாராரும் ஒருவரை ஒருவரைப் புரிதலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதை நமக்கு விளக்கும் ஒரு சங்கதி. இந்த உயர் பண்பினை அறிய பல இலக்கியங்களை நாம் வாசிக்க வேண்டும். உலகளாவிய நிலையில் நேரு மூலம் அவமானப்படுத்தப்பட்ட பாப்லோ நெருதா, நேருவிற்காக விருது வழங்கும் குழுவில் நேருவை எதிர்க்கவில்லை. எம் ஜி ஆர் நடித்த திரைப்படங்களுக்கு புரட்சிகரமான சிந்தனைகள் உள்ளடக்கிய திரைப்பாடல்கள் எழுதிய வாலி ஆன்மீக இலக்கியங்கள் படைக்கும் போது இறை மறுப்பு சிந்தனையாளர்கள் எவரும் எதிர்க்கவில்லை. காரணம் புரிதல் எனும் உணர்வே. அன்றியும் வாலி “எப்படி, எப்படி, சமைஞ்சது?” எப்படி எனும் பாடல் எழுதிய போது ஒட்டு மொத்த தமிழகமே பொங்கி எழுந்து கண்டனக்குரல் எழுப்பியது! “நான் துட்டுக்கும் மெட்டுக்கும் பாட்டெழுதும் படைப்பாளி. இது என் தொழில். இதில் என்ன என் மீது சினம்!” என்ற வாலியின் தன்னிலை விளக்கம் அளித்தபின் எவரும் மறுகுரல் எழுப்பவில்லை.

வானம்பாடி இயக்கத்திற்குப் பின் தமிழில் இமையம் ,ரவிக்குமார்,ராஜ் கவுதமன், க.பஞ்சாங்கம் ,போன்றோரால் கோலோச்சிய படைப்புக் களம் தலித் இலக்கியங்கள் மற்றும் பெண்ணியம்..

இதன் பிறகு பிற மொழிக் கலப்பு நாகரீக சீரழிவுக்கான ஊடக வளர்ச்சி மேனாட்டு பண்பாட்டு மோகத்தில் சிக்குண்ட நமது இளைஞர் வட்டம் என தமிழின் நடையில் ஒரு மெலிவு உண்டானது என்றால் அது மிகையல்ல. இடை மெலிந்த தமிழை வடகங்கை வளைத்தனைத்துப் பிடிக்கத் தவறிய நிலையை படம் போட்டு விளக்கியது ஈழ சிக்கல்!!! ஈழப் பிரட்சனை என்பது உலகளாவிய தமிழர்கள் எவரும் தமிழர்களே எனும் விழிப்பை தமிழ் இலக்கிய உலகில் உண்டாக்கியுள்ளது. கலாநிதி க.சுப்ரமணியம், கலாநிதி சிவத்தம்பி ,நுஹுமான் ,எஸ்.பொ,என ஈழத்து படைப்பாளிகள் தமிழகப் படைப்பாளிகள் வரிசைக்குள் வாழ்ந்த காலம் , இன்று ஒரு ரொஷான் , அகரமுதல்வன் ,ஈழவாணி ,தீபசெல்வன் போன்றோர் வெளி வந்துள்ள வகையில் உறுதி செய்யப்பட்டு அவர்கள் இந்நிலைக்கு வந்துள்ள நிலைக்கு இணைய தளங்களின் செயல் பாடும் பங்களிப்பும் உண்டு எனில் அதில் எழுத்து.காம் பங்களிப்பு மிகு சிறப்பு மிக்கது. 19000 உறுப்பினர்கள் மத்தியில் எண்ணற்ற இளைஞர்கள் இன்று தமிழுக்காக வீரியம் மிக்க படைப்புகளை தங்களது "கோலாகலமான கொண்டாட்டப் பொழுதுகளை துறந்து " படைப்புகள் அளிக்கின்றனர் எனில் அது எழுத்து.காம் ஆகும்.

படைப்பாளி ஒருவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது; வாசகனுக்கும் படைப்பாளியின் படைப்பு மீதான விமர்சனப் பார்வையில் விரிவாக்கம் கலந்த பார்வை இருக்கும் ­ இருக்க வேண்டும். அன்றியும் வாசகன் மொழியும் கருத்துக்களில் நாகரீகம் மற்றும் தன்னிலை புரிந்துணர்வு மேலோங்கி இருந்தால் படைப்பாளி காணாமற் போவான். ஆனால் குழுவாக இணைந்து அநாகரீக குரல் எழுப்பினால் தவளைக்கூட்டம் கிணற்றில் எழுப்பும் குரல் ஒப்பும்! இம்மாதிரியான சிக்கல்கள் பலவற்றையும் நொடிதோறும் சந்தித்த வன்ணம் ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு பல புதிய வண்ணங்களுமாய் ஓர் இணைய தளம் தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறது. அது எழுத்து.காம் ஆகும்.

ஒரு படைப்பாளிக்கு படைப்பு எண்ணிக்கையிலும் பக்கப் பரப்பிலும் கருத்து பரிமாற்றத்திலும் தமிழில் உள்ள இணையதளங்களிலேயே விரி எல்லைக் கொண்டதுதான் எழுத்து.காம்.இங்கு படைப்புகளுக்கு அளிக்கப் படும் அதே சுதந்திரம் கருத்துகள் பரிமாறிக் கொள்ளுதலிலும் உள்ளது ஒரு சிறப்பு அழகு. அது எழுத்து.காம் ஆகும்.

அப்படிப்பட்ட எழுத்து.காம் இணைய தள பயன்பாட்டிற்கான மென்பொருள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தோழர் .ராஜேஸ்குமாரை இன்று அவரது அலுவலகத்தில் தோழர் கவிஜி மற்றும் தோழர்.கமலக்கண்ணனுடன் சந்திதேன்- ஓர் அதிர்ச்சியுடன். . !!!!!

(தொடரும் )

எழுதியவர் : அகன் (5-Apr-14, 7:42 pm)
பார்வை : 168

மேலே