சாபங்களிலும் சில நேரம் நன்மைகள் விளைவதுண்டு

சாபங்களிலும் சில நேரம் நன்மைகள் விளைவதுண்டு ..


துர்வாச முனிவர் ஒருநாள் கேகைய நாட்டிற்கு வந்தபோது, அங்குள்ள அமைதியான சுற்றுச்சூழலைக் கண்டு அங்கு தபம் செய்ய நினைத்தார்.

துர்வாச முனிவரின் வருகையை அறிந்த கேகைய நாட்டு மன்னன் அசுவபதி தனது அரண்மனையை ஒட்டியிருந்த வனத்தில் தபம் மேற்கொள்ளும்படி வேண்டி, அவரது மகள் கைகேயியை அவருக்கு பணிவிடைகள் செய்யப் பணித்தார்.

ஊன் உறக்கமின்றி தபம் மேற்கொண்ட முனிவர் பல நாட்களாகியும் கண்களைத் திறக்காததால், முனிவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் கைகேயிக்கு வர, அவளது சுண்டுவிரலை முன்வரின் நாசியில் நுழைக்க, தபம் கலைந்து விட்டதால் துர்வாசர் அவள் கைவிரல் இரும்பாகக் கடவது என்று சபித்துவிட்டார்.

கைகேயி அவளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் தவறு செய்துவிட்டதாகவும், அதற்காக இவ்வளவு பெரிய சாபம் தரவேண்டுமா என்று மன்றாடியதால், துர்வாசர் சினம் தணிந்து, "சிறுமியே ! சாபம் கொடுத்தது கொடுத்தது தான். இருப்பினும், நீ எப்பொழுது விரும்புகிறாயோ அப்பொழுது உன்விரல் இரும்பாக மாறும்" என்றார்.

பருவம் அடைந்த கைகேயியை கோசல நாட்டு மன்னர் தசரதன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது, இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், தசரதனின் படைபலம் கைகேய நாட்டு மன்னர் அசுவபதியிடம் இல்லாததால், கைகேயிக்குப் பிறக்கும் ஆண் வாரிசுக்கே பட்டம் சூட்டப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை திருமணம் செய்து வைத்தார்.

வைஜயந்தம் எனும் நாட்டை ஆண்டு வந்த சம்பராசுரன் என்பவனைத் போரில் வெல்லவேண்டுமென நினைத்த தேவேந்திரன், தசரதரின் உதவியை நாடி வந்தான்.
அவன் வேண்டுதலுக்கு இணங்கி வைஜயந்தம் நோக்கி தமது படைகளுடன் புறப்பட்டார் தசரதர். போர்களத்திற்கு பெண்கள் செல்வது வழக்கம் இல்லையாயினும், தானும் உடன் வருவேன் என கைகேயி பிடிவாதம் செய்து தசரதனுடன் சென்றாள்.

பதினோரு நாட்களாக தொடர்ந்தது போர்.நடந்தும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க முடியாத நிலை. பன்னிரண்டாம் நாள் காலை. ‘வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் தேரைச் செலுத்தினார் தசரதர். அப்பொழுது, திடீரென, வலப்பக்கமாக தேர் சாய்வதைக் கண்ட கைகேயி, கடையாணி அச்சில் இருந்து மெள்ள நழுவிக் கொண்டிருந்ததைக் கண்டு திகைத்தபொழுது, துர்வாசரது சாபம் அவள் நினைவுக்கு வரவும் தன் விரலை இரும்பாக மாற்றி அதையே கடையாணியாக்கி, தேர் குடைசாயாமல் காப்பாற்றினாள். போரில் தசரதர் வெற்றி பெற்றார்.

பிறகு நடந்ததெல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே !

எழுதியவர் : (6-Apr-14, 12:26 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 163

மேலே