சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 17

சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம் 17
17.
கிங்கரர்களே ! உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
கேள்வி கேட்டால் தானே … தெரியுமா அல்லது தெரியாதா என்று சொல்வதற்கு ?.
சந்தேகமென்னும் ஒரு சரக்கு அது எல்லோரிடமுமே தான் இருக்கு. படிக்காதவர்களை விட படித்தவர்களிடம் தான் சந்தேகம் நிறையவே இருக்கு.
ஒரு உதாரணம். யோஜனா என்பது ஒரு சமஸ்க்ருத சொல். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குரிய தொலைவை அளப்பதற்கு பூலோகத்தில் என் முன்னோர்கள் உபயோகப்படுத்திய சொல்.
இப்பொழுது யோஜனா என்ற இச்சொல் உபயோகத்தில் இல்லை. தொலைவை அளப்பதற்கு "மைல்" என்ற சொல்லும் இருந்தது. அதுவும் இப்பொழுது உபயோகத்தில் இல்லை. இப்பொழுது எல்லோருமே "கிலோமீட்டர்" என்ற சொல்லையே உபயோகிக்கிறோம்.
ஒரு யோஜனா என்பது 5 மைல் என்று ஒருதரப்பினரும், மற்றொரு தரப்பினர் 8 மைல் என்றும் கூறுகிறார்கள். கற்றவர்களுக்கு மத்தியில் ஏன் இந்த அபிப்ராய பேதம் என்று தெரியவில்லை.
ஒரு யோஜனா என்றால் அது எத்தனை கிலோமீட்டர் தூரத்தை குறிப்பதாகும் - 8 கிலோமீட்டரா அல்லது 12.8 கிலோமீட்டரா ?
இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குத் சொர்க்கலோகம் கிடைக்காதா என்று நினைக்கவேண்டாம் .. கிங்கரர்களே !
நான் இறந்து விட்டேன். ஆவியாகிய என்னை நீங்கள் சுமந்துகொண்டு எமலோகம் செல்கிறீர்கள். ஆவியாகிப் பறந்து மேலேசென்று சத்யலோகத்தையும் தாண்டி அதற்கப்பால் இருக்கும் வைகுண்டலோகத்தை பத்து நாட்களுக்குள் அடைய வேண்டுமானால் எத்தனை வேகமாய் பறந்து செல்லவேண்டும் என்று ஒரு சின்ன கணக்கு போடவேண்டும். அதற்குத்தான் இப்படியொரு கேள்வி ..
கிங்கரர்களே !! இதை நான் நன்கு கற்ற ஒருசிலரிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு, சிலர் என்னை கேலி செய்து, டேய் அம்பி .. உனக்கு வைகுண்டலோகம் போகும் அருகதையில்லை என்று சொன்னதை என் இருசெவிகளால் கேட்டிருக்கிறேன்.
வைகுண்ட லோகம் இல்லாவிட்டாலும் பாதாளலோகம் செல்லவேண்டுமானாலும் கணக்கு நான் தானே போடவேண்டும்.
ஒரு யோஜனா என்பது எத்தனை கிலோமீட்டர் என்று சரியாகச் சொல்லுங்கோ !!
மானுடா ! இதெல்லாம் எங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்ட சமாச்சாரங்கள். ஒருவேளை, உனக்கு சொர்க்கலோகம் கிடைத்தால் அங்கு சென்ற பிறகு, இந்திரனையோ அல்லது மற்றும் வசிஷ்டர் போன்ற ஞானிகளிடம் கேட்டுக்கொள். சரிதானா ?
சரி .. கிங்கரர்களே ! அப்படியே ஆகட்டும்.
- வளரும் -