ஏகாந்தம் கண்டுகொண்டேன்

உன்னை காணத்துடிக்கும்
உள்ளங்களின் வரிசையில்
உலகங்கள் பின்நிற்பதனால்
உருக்கி எடுக்கும்
கதிரவன் தாண்டி- உன்னை
கண்டு கொண்ட நான்
மதுவில் மாட்டிய வண்டோ
சீனியில் சிக்கிய சிற்றெரும்பொ-
என்உன் முன்னிலையில்
என்னிலை மறந்து நின்றேன்......!

மெல்லநீ இதழ் திறந்து
செல்லமாய் வாங்க மாமா - என
சொல்லி அழைக்க - எனக்குள்
சொல்லாமல் பெய்த மழையில்
நில்லாது கிடந்த ரோமமும்
சில்லிட்டு எழக்கண்டேன்....!
உன்
புருவ விழிகளோடு - என்
பருவ விழிகள் எதிர்வினையிட
உருவான ஈர்ப்பு விசையில்
திருதிரு நாய்க்குட்டியாய்-நின்
திருவடி தொடர்ந்தேன்

பறக்கும் மயில் நின்று
திறக்கும் தோகை அழகாய்
திரும்பி எனை பார்த்து நீ
விரும்பி கொடுத்த இடமமர்ந்து
சுற்றுப்பாதையில் நிறுத்திய
செயற்கைகோள் கணக்காய்
சற்றும் இமைக்காமல்
வியந்து கொண்டேன்
விண்கலமும் பார்க்காத
வெண்ணிலவின் பின்னழகை...!

கரைகிறேன் மாமனென
தெரிந்து கொண்டாயோ...
தேநீரோடு தேனிலா...நீ
விரைந்து வந்தாய்
ஆவி பறக்கும்
தேனீரில் சூடில்லை
ஆவி துடிக்கும்
என்னில் நானில்லை

அன்னமென நடர்ந்து
என்னெதிரே அமர்ந்தாய்
இன்னுமென்ன தாமதம்
தென்றலது வீசிட
மலர்வாய் திறந்து
மலர்வாய் என்றேன் - நீ
மலர்ந்தும் மலராத
முல்லைஇளம் மொட்டாய்
மௌன சங்கேதத்தில்
மனதில் சங்கீதம் செய்தாய்...

சொந்தத்தில் நீபிறந்த நாளே
சொர்க்கத்தை கனவில் கண்டேன்
இருகாந்தமாய் நாம்எதிரமர
சுகந்தமாய் சூழ்நிலைஅமைய
ஆனந்தம் அலையோட
ஏகாந்தம் கண்டுகொண்டேன்....

கவிதை எண் 50ஆய் கற்பனை காதல்....

எழுதியவர் : காசி. தங்கராசு (7-Apr-14, 1:07 am)
பார்வை : 112

மேலே