நம் கிராமத்து காதல்
ஒரு வருடம் தவமிருந்து
ஒரு முறை முகம் பார்த்தது.
எண்ணி எண்ணி பார்த்தவன்(ள்)
எதிரே வந்தால் பயந்து போனது
சிரிப்பதை பார்த்துக்கூட
ஜில்லென்று போன மனசு
தூரத்தில் கண்களில் பட்டு
துள்ளி குதித்த மனசு
உலகமே அவள்(ன்) தான் என்று
உற்சாகத்தில் மிதந்த உணர்வுகள்
கவலைகள் கூட மறந்து
கனவுகளில் மிதந்த தருணங்கள்
தெருக்களில் பார்த்தால்
செய்வதறியாது திகைத்தது
தோழனை (தோழியை) தூது விட்டு
பதிலுக்காய் பதுங்கி நின்றது
நேரில் பேசிட நிலைகலைந்து
மேனியெல்லாம் நடுங்கியது
வீட்டருகே வந்த போது
வீர வசனம் பேசியது
கால்கடுக்க நின்று காண்பதற்காய்
கடைசி பேருந்துகளையும் விட்டது
பக்கத்தில் நிற்க கூட
பயந்தெடுத்து ஓடியது
காதலை சொல்ல பலநாளாய்
கனவுகளில் பயிற்சி செய்தது
காதலரின் குரல் கேட்டு
பக்கத்து வீட்டுக்கு பயந்தது
திருவிழா காலத்தில் கண்குளிர
சுற்றி சுற்றி தரிசித்தது
காணத்துடித்து காண முடியாமல்
கண்கள் கலங்கி போனது..
உள்ளூர உணர்கிறோம் காதலை
இன்று வரை யாருக்கும் தெரியாமல்..