குழலூதியே
கோவர்த்தனகிரி
குடைபிடித்த
குழலூதியே !
இங்கே
விதிக் கோரத்தாண்டவத்தால்
கொடும் மழையில்
நனைந்து தேம்பி
இரட்சிப்பாரின்றியும்-
ஒதுங்க இடமின்றியும்
உனதருமை மேய்ச்சல்கள்
வழி தெரியாது
பாதை மாறி
கசாப்புக் கடை
வீதிகளில் பயணிக்கிறார்கள்
நீயோ
இன்னமும் இரக்கமின்றி
கோபியரோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறாய் !
த்ருனாவிரதச் சுழற்காற்றினை
உன் பாரம் கூட்டி
விழ வைத்த
யதுகுல திலகனே -
கொடும் பூதனைகள்
மார்பு திறந்து கிடக்கிறார்கள்
யார் யாரோ அமுதருந்தி
அகிலத்தின் பெரும்பகுதியை
அழித்துக் கொண்டிருக்க
நீ
இன்னமும் பாராமுகமாய்
அன்றலர்ந்த தாமரை மலர்சூடி
பாம்புப் படுக்கையில்
ஆனந்த சயனத்திலிருக்கிறாய் !
பாஞ்சாலிக்குத் துகிலும்
பார்த்தனுக்குக் கீதையும்
அருளிய
தேவகி மைந்தனே -
தினம் தினம் ஏதாவதோரிடத்தில்
பட்டப் பகலிலேயே
கதறக் கதற பாஞ்சாலிகளின்
கற்ப்பினை துகிலென
உறிந்து திரிகிறார்கள்
ஊருக்கிரண்டு துச்சாதனர்கள் !
கீதை உபதேசத்திற்குப் பதில்
போதை உபதேசம் பெற்று
பார்த்திபன்கள் பல்லாயிரம் பேர்
" பார் '' - திபன்களாக
தள்ளாடிக் கிடக்கிறார்கள் -
நீயோ
இன்னமும் கைசோரப் பருவத்தில்
வெண்ணை திருடிய
கனவிலேயே மிதந்தபடி
கண்மூடித் துயில்கிறாய் !
நின் மேய்ச்சல்களைக்
காத்து ...
அரக்கர்களை அழித்து ...
பாவப்பட்ட பாஞ்சாலிகளின்
கற்பினைக் காத்து ...
பார்த்திபன்களுக்குக்
கீதை போதிக்க
நீ வருவதாயிருந்தால்
ஜாக்கிரதை .......
பதினோராவது அவதாரமாய்
புது அவதாரம் எடுத்து வா -
இல்லையேல்
கலியுகக் காலியன்கள்
தங்கள் கொடு நாக்கில்
சாதி நஞ்சு தடவி
பருவத்திற்கொரு படமெடுத்தாடியபடி
உனக்கும்
குலமுத்திரை குத்திவிடுவார்கள் .