தேர்தல் கவிஞர் இரா இரவி

தேர்தல் ! கவிஞர் இரா .இரவி !

குடிமகன் கடமை வாக்களிப்பு சரி
வென்றவர் கடமை ஏமாற்றுவதா ?
தேர்தல் !

நம்பிக்கையோடு வாக்களிப்பு
நம்பிக்கை மோசமே பரிசளிப்பு
தேர்தல் !

யாரை நம்பினாலும்
மோசம் போகிறோம்
தேர்தல் !

எல்லாருமே திருடர்கள்தான்
இளையராஜா பாடல் நினைவிற்கு
தேர்தல் !

சுரண்டும் கோடிகள்
சுவிஸ் வங்கியில் முதலீடு
தேர்தல் !

சரியான ஆளை சுட்டாததால்
ஆள் காட்டி விரலில் கருமை
தேர்தல் !

வழங்குவதில்லை வாய்ப்பு
கட்சிகள் நல்லவர்களுக்கு
தேர்தல் !

நல்லவர்களுக்குப் பஞ்சம்
குறைந்தபட்சக் கெட்டவர் தேர்வு
தேர்தல் !

மாற்றம் மாற்றம் என்பார்கள்
வென்றதும் மாற்றம் பெறுவார்கள்
தேர்தல் !

ஏற்றம் ஏற்றம் என்பார்கள்
வென்றதும் ஏற்றம் பெறுவார்கள்
தேர்தல் !

குடும்பமே இல்லை என்பார்கள்
குடும்பம் உண்டு என்பார்கள்
தேர்தல் !

மக்களுக்காக உழைப்பேன் ஆம்
என் மக்களுக்காக உழைப்பேன்
தேர்தல் !

வானத்தை வில்லாய் வளைப்போம்
வானில் விமானத்தில் பறப்பார்கள்
தேர்தல் !

கெஞ்சிக்கேட்பார்கள் வாக்கு
வென்றதும் மறப்பர் சொன்ன வாக்கு
தேர்தல் !

வீடு தேடி வருவார்கள்
வென்றதும் நாம் தேட வேண்டும்
தேர்தல் !

எல்லா சலுகைகளும் வென்றவருக்கு
எல்லா ஏமாற்றம் வாக்களித்தவர்களுக்கு
தேர்தல் !

ஊழலை ஒழிப்போம் என்று வந்து
ஊழல் மன்னாராவர்கள்
தேர்தல் !

வாக்களிக்க நவீன இயந்திரம் சரி
வாக்களித்த ஏழைகள் வாழ்க்கை ?
தேர்தல் !

ஜனநாயகம் பெருமைஅன்று
பண நாயகம் சிறுமை இன்று
தேர்தல் !

சின்ன மீன்கள் போட்டு
சுறா மீன்கள் பிடிப்பு
தேர்தல் !

மணலைக் கயிறாகத் திரிப்போம்
மணல் கொள்ளை அடிப்போம்
தேர்தல் !

சாதியை ஒழிப்பது கொள்கை
அதிகபட்ச சாதிக்காரரே வேட்பாளர்
தேர்தல் !

பேசியே குழப்புவதால்
குழப்பத்திலேயே வாக்களிப்பு
தேர்தல் !

நான் தனி ஆள் என்பார்கள்
தோப்பாகி விடுவார்கள்
தேர்தல் !

பெயரோ பெரிது மக்களாட்சி
நடப்பதோ அரசியல்வாதி ஆட்சி
தேர்தல் !

ஐந்து வருடங்கள் சுரண்டிட
அளித்திடும் அங்கீகாரம்
தேர்தல் !

எத்தனை முறை வந்தாலும்
ஏழைகளுக்கு விடியவேயில்லை
தேர்தல் !

செலவோ பல கோடிகள்
மக்களுக்கு பலனோ பூச்சியம்
தேர்தல் !

விலைவாசியை இறக்குவோம் என்று
வந்ததும் ஏற்றுவார்கள்
தேர்தல் !

குதிரைக் கொம்பாகும்
இளைஞர்கள் வேலைவாப்ப்பு
தேர்தல் !

அன்று உத்தமர் என்பர்
இன்று திருடுடர் என்பர்
தேர்தல் !

ஒழியவில்லை மன்னராட்சி
தொடரும் வாரிசு வேட்பாளர்
தேர்தல் !

தெரிந்தே ஏமாறும்
ஏமாற்றுத் திருவிழா
தேர்தல் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Apr-14, 9:17 am)
பார்வை : 245

மேலே