நினைவெல்லாம் நீதானடா - நாகூர் கவி

யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!

வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!

நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?

ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?

காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!

கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!

அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?

உனை நினைந்து
நான் தனிமையில் வடித்த
கண்ணீர்துளிகள்தான்
காதல் கடலலையோ....?

எனை மறந்து
நான் சோகத்தில் படித்த
கவிதைகளையெல்லாம்
காதலன் நீ காணலையோ...?

உன் காதல் குறும்பாலே
நான் துரும்பாய் ஆனேனடா...
குறும்பா முதல்
நெடும்பா வரை
என் கவிதைகளாய் நீயும் ஆனாயடா...!

எழுதியவர் : நாகூர் கவி (15-Apr-14, 12:28 am)
பார்வை : 663

மேலே