மரபுகளை உடைத்தெறிந்தவன்

அரிச்சுவடு முற்றும் மறந்து
மமதையால் மதம்பிடிக்க
அவன் காலத்தின் சிம்மாசனத்தில்
அரியணைக்கு அரசனாய்

பொருளற்ற பூச்சியத்தை வைத்து
ராஜ்ஜியம் ஆழ்வதாய்
பாண்டித்தியம் பெற்ற பண்டிதனாய்
வெளி உலகுக்கு வேடிக்கை காட்டினான்

மனித நேயம் மயிரளவும் அற்ற
சாதுக்கள் அவனது சந்ததிகளாய் தொடர
தனித்து எதையும்
சாதிக்க முடியும் என்ற ஆதிக்க வெறி
கை,கால் முளைக்க வளர்ந்திருந்தன
அவனது தலையெங்கும் பேனாய்

கூடி வாழ்வதில் காகத்தின் முகம் காட்டி
அவனுக்கென கூவிய குயில்களை
பருந்துகளின் விருந்தாக்கி
கொத்தி விரட்டினான்
கொள்கை,கோட்பாடு முழுவதிலும்
தான் படுவானாய் பூமிக்கு
இறக்கப் பட்டது போன்ற இறுமாப்பு
உடல் முழுக்க ஊறியிருந்தன

உடன் பாட்டுக்கு ஒத்துவராத
முரண் பாட்டு மூட்டைகளால்
நிரம்பி வழிந்தன நெஞ்சுரம்

கல்லையில் உண்ண பருக்கைகள் தேடி
இரவு,பகலாய் இரந்து திரிந்த
கொல்லைகள் மறந்தான்
கிளைகளுடன் எல்லைகள் மீறினான்
எதிர் பட்டவர்களில் ஏறினான்

தனது வேர்மட்டும் மண்பற்ற
செடி,கொடி புல்,பூண்டு யாவையும்
பிடுங்கி எறியும் பிரயத்தனம்
அவன் பற்கள் நிறைய
காவியாய் படிந்திருந்தன
ஒரு நூற்றாண்டுக்கு போதுமான
கறையுடன்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (15-Apr-14, 1:41 am)
பார்வை : 79

மேலே