தேவதாசி

தாய் நாட்டிற்காக தன் உயிரை அற்பணிப்பவர்கள் இந்த காலத்தில் சிலர்தான் அந்த சிலரில் ஒருவன் தன்னுடைய தேசத்தை காக்க முழு மூச்சுடன் போராடிக்கொண்டிருக்கும் பொழுது எதிர் பாராத விதமாக அந்த ராணுவ வீரன் கன்னி வெடியில் சிக்கி அவனுடைய வலது காலை இழந்தான். அதனால் மேற்கொண்டு அந்த உயர்ந்த சேவையை தன் தேசத்திற்காக கொடுக்க முடியாத கட்டாயத்தின் காரணமாக தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினான்.

அவனுக்கென சொந்தம், பந்தமென்று யாரும் கிடையாது ஆனால் பல குழந்தைகளுக்கு தகப்பன். ஆம். ஆதரவற்ற பல குஞ்சிகளுக்கு பாச பறவை. தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியை சேகரித்து அவர்களுக்காக ஒரு அழகிய கூட்டை கட்டி அடைக்கலம் தந்தவன்.

அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கி தவித்த பல பிஞ்சி நெஞ்சங்களுக்கு தாயாகவும், தந்தையாகவும், ஆசிரியனாகவும், தோழனாகவும் பிரதிபலித்து; ஒரு முகம் காட்டும் கண்ணாடியாக அவர்களுக்கு இன்று முகவரி காட்டுகின்றான்.

ஒருநாள் அவனுக்கோர் கடிதம் வந்தது அந்த கடிதத்தோடு கூடிய ஒரு காசோலையும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் இவை அனைத்தும் குழந்தைகளுக்காக என்ற ஒரு வாசகம் மட்டும் குறிப்பிடப்பட்டு “இப்படிக்கு தேவதாசி" என்று அனுப்புநர் முகவரியின்றி எழுதப்பட்டிருந்தது.

அவனுக்கோர் ஆச்சரியம்! இந்த உலகத்தில் இப்படியும் கூட சில உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து. அனுப்பியவர் யாரென்று தெரிந்துகொள்ள அவனுக்கோர் ஆசை மலர்ந்தது. சில மாதங்கள் கடந்தன ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை குழந்தைகளுக்காக அந்த பெண் அனுப்பிக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் உடற்பயிற்சி செய்வதற்காக விளையாட்டு மைதானத்திற்கு அந்த ராணுவ வீரன் சென்றுகொண்டிருந்தான். வழியில் ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தாள். அவளை சூழ்ந்து மக்கள் கூட்டம் ஆனால் எவரும் அவளது உயிரை காப்பாற்ற முன்வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ராணுவ வீரன் அவளை தொட்டு தூக்க முயன்றான். ஒரு குரல் "அவளை தொடாதே, அவளை தொடாதே" என்று ஒலித்தது. ஏன்? எதற்க்காக? என்று அவன் கேட்டான் அதற்கு "அவள் தீண்டத்தகாதவள்" என்ற பதில் மட்டும் வந்தது.

அந்த மானுட முண்டங்களின் மனிதாபிமானமற்ற வார்த்தைகளையும், செயல்களையும் எண்ணி மனமுடைந்து போனான். இருந்தும் அவனது முயற்சியை கைவிடாமல் அந்த பெண்ணை தூக்கவே போராடிக்கொண்டிருந்தான். அவன் ஒற்றை காலுடன் தடுமாறியதை கண்டு ஒரு பெண் ஓடிவந்து அவனுக்கு தோல் கொடுத்து உதவினாள்.

இருவரும் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள். காயமடைந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகப்படியான ரத்தம் சேதமானதால் அந்த பெண்ணிற்கு ஓ எதிர்மறை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த பிரிவில் “இப்பொழுது ரத்த இருப்பு இல்லை” என்று தெரிவித்தார்கள். உடனடியாக அந்த ராணுவ வீரனுடன் வந்த பெண் “என்னுடைய ரத்த பிரிவும் அதுதான் நான் தருகிறேன்” என்று கூறினாள்.

அந்த பெண் தன் கையில் வைத்திருந்த காகித பையை அந்த ராணுவ வீரனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள். எதிர்பாராத விதமாக அவன் கையில் வைத்திருந்த காகித பை கீழே விழுந்து அதன் உள்ளே இருந்த ஏராளமான கடிதங்கள் தரையின் மேல் சிதறியது. கீழே விழுந்த கடிதங்களை ஒவ்வொரு கடிதமாக எடுத்து அடுக்கினான். அந்த கடிதங்கள் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்காகவும், ஆதரவற்ற முதியவர் இல்லங்களுக்காகவும் அனுப்பப்பட இருந்தது. அந்த கடிதங்களில் ஒரு கடிதம் தன்னுடைய இல்லத்தின் முகவரியை கொண்டிருக்க அந்த கடிதத்தை கண் கலங்கிகொண்டே பிரித்து பார்த்தான் அந்த ராணுவ வீரன். உள்ளே காசோலையோடு எழுதப்படிருந்த ஓர் வாசகம் “இப்படிக்கு தேவதாசி". இத்தனை நாட்களாக தேடியவரை கண்டுவிட்டோமென்ற மகிழ்ச்சியுடன், இளம் பெண்ணிற்கு இப்படியோர் நிலைமையா! என்ற வேதனையும் கலந்து அவனை வாட்டி வதைத்தது.

சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த பெண்ணிடம் தான் யாரென்று முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அதன் பிறகு “ஏன் இந்த நிலை, எதற்க்காக இப்படியொரு வாழ்க்கை” என்று அந்த பெண்ணிடம் கேட்டான். சிறிது நேரம் மௌனத்தில் அவளது கண்கள் சிவந்து கலங்கி நின்றன. அழுது கொண்டே மெல்ல மெல்ல தன் கண்ணீர் கதையை தொடுக்கத் தொடங்கினாள்.

“ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில் வரப்போகும் கணவனை பற்றியும், தன் சொந்த, பந்தங்களைப் பற்றியும் பல கனவுகள் காண்பாள். ஆனால் என் வாழ்க்கையோ கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு யாரை குறை கூறுவதென்று எனக்கு தெரியவில்லை. வருமையின் காரணமாக சிறு வயதிலேயே என்னை பெற்றெடுத்தவர்கள் தெருவோரத்தில் விட்டு சென்றுவிட்டனர். இந்த பாழாய் போன உலகத்தில் சில மனிதர்கள் எனது வருமையை சாதகமாக்கிக் கொண்டு என்னை நினைத்தபடி ஆக்கிரமித்து கொண்டார்கள். ஒரு காலகட்டத்தில் தாம் செய்வது தவறென்று அறிந்தும் கூட அதை திருத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற இயலவில்லை. அந்த கலங்கத்திலிருந்து வெளியே வருவதற்கு பல முறை முயன்றுவிட்டேன் ஆனால் இந்த சமூகம் என்னை தாசியாகவே பாவித்தது. உண்மைதான் ஒரு பெண்ணிற்கு ஒருமுறை கலங்கம் வந்துவிட்டால் வாழ்க்கையின் எந்த ஓரத்திற்கு சென்றாலும் அந்த கலங்கம் பின் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம். என்னை போன்று ஆதரவற்ற பல பெண் குழந்தைகளின் நிலை வருமையின் காரணமாக கேள்விகுறியாகிவிட கூடாது என்பதற்காகத்தான் என் உடலை விற்று அவர்களது கனவுகளை என்னால் முடிந்தவரை நினைவாக்கிக் கொண்டிருக்கின்றேன்” என்று கண்ணீர் மல்க கதறி புலம்பினாள்.

அடுத்த நொடி அவளுக்கோர் அதிர்ச்சியான ஆனந்தம் காத்துக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக காதல் உணர்வை உணர்ந்த அவளிடம் “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று அந்த ராணுவ வீரன் கேட்டான்.

அவளுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. மௌனத்திடம் சில நிமிடங்கள் வசப்பட்டன. கண்ணீர் மட்டும் தாரை தாரையாக சிந்திச் சிதறியது. சம்மதம் தந்துவிட மாட்டாளா! என்ற ஏக்கத்தோடு அவனும் உறைந்து உருகினான். சிறிது நேரத்தில் அந்த பாவை எந்த பதிலும் கூறாமல் மௌனத்தோடு சென்றுவிட்டாள்.

மறுதினம் மொட்டுகள் மலரும் வேளையிலே; பனித்துளியை மெல்ல கதிரவன் கவரும் காலையிலே அவனுடைய அன்பிற்காகவும், ஆதரவற்ற குஞ்சுகளுக்கு தாயாகவும் அவன் கட்டிய கூட்டில் நேசத்திற்கு ஏங்கிய ஒரு பாசப் பறவையாய் அவளும் அடைக்கலமானாள். அன்று முதல் அவர்கள் அனைவருக்கும் அழகான பொற்காலம் மலர்ந்தது.

வாழ்க்கை துணை அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரமென்பது உண்மைதான். சில உணர்வுகள் உயிரால் உணரப்பட வேண்டிய ஓர் உன்னதம் இதை அடிப்படையாக கொண்ட காதலுக்கு இரு மனம் மட்டுமே ஆதாரம். நாம் செல்லும் பாதை தவறாக இருந்தாலும் கூட சில உயர்வான உணர்வுகள் அந்த பாதையை மலர்களால் அலங்கரிக்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. எனவே வாழ்க மனமுடன், வளர்க குணமுடன்.

குறிப்பு: இந்த கதையும், கதாப்பாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.

ஆக்கமும், உணர்வும்,
கார்த்திக் நித்தியானந்தம்.

எழுதியவர் : கார்த்திக்... (16-Apr-14, 3:56 am)
பார்வை : 386

மேலே