பறக்கத் துடித்ததடிப் பறவை
--தாய்--
முட்டைகள நாத்தமுடன் இட்டு
முடிஞ்சிருச்சி நாட்களோ எட்டு
--தந்தை--
பாடி வந்தான் நானுமானேன் அப்பனென்று
பாதி வழியில் கேட்டுவந்தான் செய்தியொன்று
--வீடு வந்து மனைவிக்குப் போதனை—
கேள்விப்பட்டேனடி சங்கதி ஒன்னு
கேட்டுத்தெளிஞ்சிக்கடி சரியா நின்னு
பறக்க துடித்ததடி பறவை ஒன்று
விரிக்கத் தெரியவில்லை சிறகை அன்று
தவறி விழுந்ததடி தரையில் அன்று
தளர்ந்து எழுந்ததோ சிறையில் இன்று
கூடி கூத்தடித்தது கூட்டில் அன்று
கூட்டம் கூடியதடி கூண்டில் இன்று
வாய்திறந்த பொழுதெல்லாம் பந்தியடி அப்போ
வாய்தவறிப் போனதெல்லாம் பரிபோனதடி இப்போ
சிரிச்சிச் சிவந்ததடி கன்னங்கள் அப்போ
சிதைந்துச் சிவக்குதடி கண்கள் இப்போ
மூப்புக் காலத்து ஆலமரப்பொந்தடி வீடு
மூலையில் ஆடும் ஓட்டைப்பானையடி கூடு
நேத்தோ எட்டிப் பார்த்தா சூரியோதயம் - இன்றோ
சுத்திப் பார்த்தா சுட்டுத்தள்ளும் விளக்குகளடி
நேரங்காலம் ஓடிப்போச்சி
காலம்யாவும் கரஞ்சிப் போச்சி
பசிக்கு தோலு ஒட்டிப்போச்சி
பாசம் தேடிப் பாலாப்போச்சி
தாங்க முடியாம சாகப்போச்சி
வலிகள் யாவும் மறஞ்சேபோச்சி
கடைசில கிளியோ செத்துப்போச்சி
கேப்பார் இன்றி புதஞ்சேப்போச்சி
--புரியாத மனைவி—
என்ன மச்சான் சொல்லுத வெளங்கல
பின்ன என்ன செய்யச்சொல்லுத புரியல
--விளக்கும் கணவன்—
மாந்தோப்புக்கு வாக்கப்பட்ட மாங்கா மடச்சியே
மாறிமாறிச் சொன்னதெல்லம் புரியாம நிக்கிறியே
பறக்கக் கூடாதடி பிள்ளைகள்
பறந்தா வந்திடும் தொல்லைகள்
துன்ன மாங்கொட்டை இருக்க
பதுங்க மாமரப்பொந்து இருக்க
சாய ஆத்தா நீ இருக்க
பின்ன அதுக பறப்பது எதுக்கு
சின்னப் பயமும் நமக் கெதுக்கு
பண்ணிக் கிளிக்க காரியம் எதுக்கு
பறந்து திரியும் பாரம் எதுக்கு
சும்மா கெடக்கட்டுமடி!!
சும்மா கெடக்கட்டும்!!