உயிர்ப் பதுமைகள் குழந்தைகள் சார்ந்தக் கட்டுரை

உயிர்ப் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்தக் கட்டுரை }
*
குழந்தைகள் நம் உயிர்த்துளியில் உதித்த உன்னதப் பிறப்புகள்.
பஞ்சபூதங்களின் உயிர்ப் பதுமைகள். பேசும் சித்திரங்கள்.
பெற்றவரகளின் வாரிசாகத் திகழும் வருங்காலச் சந்ததிகள்.
குழந்தைகளைக் கொஞ்சாதவர்கள், மழலைச் சொல் கேளாதவர்கள்.
சேட்டைகளை ரசிக்காதவர்கள் எவரேனுமுண்டோ? அய்யன்
வள்ளுவன் எத்தனை அழகாக மழலைகளின் இனிய சொற்களைத்
தன் குறுகிய வரிகளில் இயம்புகிறார் பாருங்கள்.
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் {குறள் 66 }
பெற்றக் குழந்தைகளின் மழலைச் சொற்கள் தரும் பேரின்பம்
நுகராதவர்கள் தான புல்லாங்குழலையும், நல்லிசை யாழையும்
இனிது என்று புகழ்வர் ” என்று உரை எழுதி விளக்குகிறார்
கவிஞர். சிற்பி.
*
இந்தப் பிஞ்சு அரும்புகளை நாம் எப்படி அணுகுகிறோம்? எப்படி
பேசுகிறோம்? எப்படி. நடத்துகிறோம். என்பதை என்றேனும்
சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? குழந்தைகள் பிறந்ததிலிருந்தே
நல்லவர்கள் தான் பெற்றோர்களாகிய நாம் தான் அவர்களை
தவறான முறையில் வழி நடத்துகிறோம் என்று குற்றம்
சுமத்துகின்றன குழந்தைகள் உளவியல் மருத்தவ நூல்கள்.
அவைகள் மட்டுமல்ல, சங்க இலக்கியம் முதல் இக்கால
இலக்கியம் வரை அப்படித்தான் சொல்கின்றன. கவிஞர்களும்
குழந்தைகளைப் பற்றி மிக அற்புதமானப் பாடல் வரிகளின்
மூலம் இதையே தெளிவுப் படுத்துகிறார்கள்.
*
குழந்தைகளைப் பற்றி அரசுத்துறைச் சார்ந்த சமூக நல
மையங்கள், வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார்
பத்திரிகைகள், சின்னத்திரை ஊடகங்கள், சமூக சேவைத்
தன்னார்வக் குழுக்கள் என பல்வேறு அமைப்புக்கள் நாள்தோறும்
விரிவாகப் பிரசாரம் செய்கின்றன.
*
குழந்தைகள், தாத்தா, பாட்டியிடம் அச்சமின்றி மனம்விட்டு
சிரித்துப் பேசி .,விளையாடி, உண்டு மகிழ்கிறார்கள்.. பெற்றோர்களிடம்
கிடைக்காத பாசமும், அரவணைப்பும் அவர்களிடம்
முழுமையாகக் கிடைக்கின்றன அவர்கள் சொல்வதைக் கேட்டு,
தலையாட்டி, சம்மதித்து நடக்க விரும்பகின்றனர். குழந்தைகள்
தாத்தா பாட்டிகளிடம் வளர்வதையும், அடிக்கடி அவர்களைப்
பார்த்து மனம் பூரித்து மகிழ்வதையும் பெரிதும் விரும்புகின்றனர்.
அப்படிப் பார்க்க இயலாவிட்டால் உடல் நலம் குன்றி நோய்
வாய்ப்படுகின்றனர் என்று தாத்தா பாட்டி- பேரன் பேத்திகளிடையே
நடத்தப்பட்ட மனஇயல் ஆய்வுக் கட்டுரையொன்று தெளிவாகவே
எடுத்துரைக்கிறது.
*
குழந்தைகளைத் தாத்தா பாட்டிகளிடம் சேர்ந்து விளையாட
வைக்கின்ற மகன்/ மகள்/ மருமகன்/ மருமகள்களும் இருக்கிறார்கள். .
அவர்களிடம் சேரவிடாமல் பிரித்து வைக்கின்றவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அதே நேரத்தில் வேலைக்குப் போகும் தம்பதியர்கள்
தனிக்குடித்தனமிருந்து, ,இருவீட்டாரின் ஆதரவின்றி, வீமபாய்
குழந்தையைக் காப்பகத்தில் விட்டுப் பராமரிக்கும் போக்கும்
அதிகரித்து வருகிறது. இச்செய்கைகளினால் குழந்தைகளின் மனநிலை
எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களா?
என்றால், ,இல்லையென்றே சொல்லலாம்.,
*
குடும்பத்தில் வயதான முதியவர்கள், தங்கள் பேரக் குழந்தைகளின்
மீதான அன்புக் காரணமாக, அவர்களை எப்படியெல்லாம் வளர்க்கப்
பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை அவர்களின்
மென்மையான அணுமுறையில் அறிந்துக் கொள்ளலாம். இருப்பினும்,
இவற்றையெல்லாம் மகனே, மகளோ மருமகனோ, மருமகளோ
ஏற்றுக்கொள்கிறார்களா? அதனைச் செயல்படுத்த முனைகிறார்களா?
என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் என்ன சொல்வது?
நாமென்ன கேட்பது? என்ற மனோபாவத்தில ” எங்களுக்குக்
குழந்தை வளர்க்கத் தெரியாதா? சொல்ல வந்துவிட்டார்கள்?”
என்று வெளிப்படையாகவே பேசி முதியவர்களின் மனதை
புண்பட வைக்கவே செய்கிறார்கள். இதனால், குடும்பத்திற்குள்
தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம்
தவிர்க்கப்பட வேண்டும்.
*
இன்று வளரும் குழந்தைகளின் மனப்போக்கைப் பரிந்துக் கொண்டு,
அவர்களுக்கேற்ப, தங்களைத் தகவமைத்துக் கொண்டுக் குழந்தைகளைக்
குறித்து இலக்கியம், சமூகம், மருத்துவம், உளவியல் ஆன்மீகம்
என்னவெல்லாம் கருத்துரைக்கின்றன என்பதை அறிய முற்பட
வேண்டும். அதே நேரத்தில் வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளும்
அனுபவங்களும் பல நேரத்தில் பயன்படும் என்பதை உணர
வேண்டும். இன்றைய கணினி கல்வி முறை குழந்தைகைளை
எப்படி வசியப்படுத்தி வைத்திருக்கிறது என்பதையும் பெற்றொர்கள்
இணைய தளத்திலே வருகின்ற கட்டுரைகள் வாயிலாக அறிவதும்
அவசியமாகும்.
*
குழந்தைகள் நம்முடையவர்கள் நம்முடைய உயிர் செல்வங்கள், ,நம்முடைய சந்ததிகள் அவர்களை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்ற முழு பொறுப்புக் குடும்பத்தாரைச் சார்ந்ததேயாகும்.
அய்யன் வள்ளுவரும் என்ன சொல்கிறார்.
“ தம்பொருள் என்பதன் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் ”- { குறள்-63 }
பெற்றோர்க்குச் செல்வம் பிள்ளைகளே. அப்பிள்ளைகளுக்கு உரிய
செல்வம் அவர்களின் நற்செயல்களால் தான் உருவாகும் என்று
எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார் என்பதைப் புரிந்துக் கொள்வோமாக…!
அது மட்டுமல்ல, குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பெற்றோர்
புகட்டும் நற்சிந்தனைகள் ஆலம் விழுதாய் வேர்விட்டுத்
தழைக்கும். ஆழமாய் மனதில் பதிவாகும்.
குழந்தைகளை நேசித்து வளர்ப்போம். வாழ்க குழந்தைகள்.
*
அனுப்புநர் ;
ந.க. துறைவன்
பிளாட் எண் : 20
வசந்தம் நகர் விரிவு,
பேஸ்—3, சத்துவாச்சாரி,
வேலூர் – 632 009.
செல் : 9442234822 / 8903905822.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (16-Apr-14, 12:37 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 345

மேலே