வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 21
கவிஜியின் அடுத்த கவிதை...
"இதழ் குவித்த ஒருத்தியின் பொட்டு"....
இதழ் குவித்த ஒருத்தியின் பொட்டு...என்ன ஆகலாம்?....
சுருங்கலாம்....இல்லை கலையலாம்....
ஆனால்...இங்கே என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
கவிதை இப்படித் துவங்குகிறது...
"இதழ் குவித்து...
இருளுக்குள்
கண் மூடிக் கிடக்கிறது
யாவருக்குமான
ஓர் இரண்டாவது காதல்."
எல்லோரையும்....வாசிப்பவனையும், கவிஞரையும்....இரண்டாவது காதலால் நீளும்...ஆசையின் நீட்சியால்...செல்லமாக சீண்டுகிறது கவிதை.
"தலை விரித்து ...இரவைச் சூடி...
நீண்டு கிடக்கிறது
நிலவைத் தின்ற ஒருத்தியின்
நெடுந்தூரக் காமம்"
இன்னமும் இரவு நீள வேண்டும் என ஆசைப்படுபவளின் நெடுங்காமம் ....நிலவைத் தின்று...
தலை விரித்து...இரவைச் சூடி நீண்டு கிடக்கிறது...
இந்த உவமை...படிமங்கள் எல்லாம் என் மூளைக்கு
எட்டாதவை.
"போதும்...போதும்...
என்ற படியே போய்க் கொண்டிருக்கிறது
இரயிலைத் தவறவிட்ட தண்டவாளம்..."
பெரும் ஆசையினூடே...வழி தவறிய வாழ்க்கை...
ஒரு தண்டவாளமென நீள்கிறது.
"காற்றில் திறந்து கிடந்த சன்னலை
இழுத்தடைக்கும் ஒரு கையில் முளைக்கிறது
ஓராயிரம் இரவுகளின் கடுங்குளிர்"
"மரணத்தின் பிறந்த நாளில்
மௌனமாய் மரணித்தவன்
கூச்சல் குழப்பங்களுடன் எரிகிறது
வந்த கூட்டம்"
ஆசையின் ஜன்னலை மூட நினைக்கையில்...
முளைக்கும் கடும் குளிரில்...மரணம் பிறக்கிறது....
தொடரும் ஆசைகள் கூச்சலோடு எரியத் துவங்குகிறது...பேரிரைச்சலோடு.
"இது போதும்...
என்கிற மனதிற்குள்...
"இது"க்கான அளவு
மறக்கப்பட வைப்பதில்
சுழல்கிறது...
பூமி என்றொரு ஒருத்தியின் பொட்டு..."
கடைசியாய்...வாழ்வின் "ஆசை"க்கான அளவு...எல்லா மனங்களிலும் மறக்கப்பட வைப்பதில்தான்....சுழல்கிறது...தன் இதழ் குவித்து
சுருங்காமலும்...கலையாமலும் ...நீள்கிறது...
பூமியின் வாழ்க்கை....என முடிகிறது கவிதை.
"ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்னும் புத்தரின் போதனைக்கு ...இடரளிக்காமல்..
ஆசையின் இன்னொரு பகுதியைச் சொல்கிறது..கவிஜியின் இந்தக் கவிதை.
"ஆசைதான் பூமியின் நீட்சிக்கும், வாழ்க்கைக்கும் காரணம்"...என சொல்லிச் செல்கிறது கவிஜியின் கவிதை.
வாழ்வின் யதார்த்தங்கள்...வாழ்வியல் தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. ஆசையால் வாழும் உலகின் யதார்த்த நிலையைச் சொன்ன கவிஜியின்
அடுத்த கவிதைச் சொல்ல மீண்டும் வருவேன்...
காலத்தின் பெரும் துணையோடு.