நசுக்கி முகரப்படும் மலர்கள் நாங்கள்

பதின்மப் பள்ளியிள்
கற்பக தருக்கள் நாங்கள்
கற்பனை தொலைத்த
கற்சிற்பங்கள்.....
மகிழ்ச்சி மறுக்கப்படும்
மாபாவிகள்
விடுமுறை இல்லா
குழந்தை தொழிலாளிகள்
கற்பித்தல் இல்லா கற்றலில்
களைத்துப் போகும்
எந்திரம் நாங்கள்
கற்றல் தொழில் புரிதல்
தலைமுறை சாபம்
சமூகத்தின் மோகம்
தூக்கம் மறுக்கப்பட்டு
துக்கத்தை பரிசாய் பெறும்
துர்பாக்கியசாலிகள் நாங்கள்
ஓராண்டு படிப்பை ஈராண்டு படிக்கும்
மடையர்கள் நாங்கள்
சிறைபட்டு சிறகொடிந்தோம்
தேர்வெழுதி விரலொடிந்தோம்
பள்ளிச் சிறை அடைந்த
ஈராண்டு கைதிகள் நாங்கள்
இங்கே.... நூலகம் உண்டு
நுழைய தான் அனுமதி இல்லை
விளையாட்டுத் திடல் உண்டு
விளையாட அனுமதி இல்லை
உலக இன்பங்கள் மறுக்கப்பட்ட
துறவிகள் நாங்கள்
ஓய்வில்லா மூளையும்
உறக்கமில்லா கண்களும்
தடித்த கண்ணாடியும் சொல்லும்
நாங்கள் பதின்மப் பள்ளியின்
கசக்கி முகரப்படும்
காகிதப் பூக்களென்று....
படி படி படி என்றே
பிடி பிடியென பிடித்து
பிரம்மை கொள்ள செய்யும்
பிரணவமே எங்கள் படிப்பு
மருத்துவம் பொறியியல்
மட்டுமே படிப்பா?
லட்சங்களை கொட்டி
லட்சியங்களை பெற துடிக்கும் பெற்றோர்களே
நாங்கள் மனம் நொந்ததும்
மகிழ்ச்சி தொலைத்ததும்
உணராதவரா நீங்கள்....
உங்கள் கெளரவத்தின்
பலியாடுகளா....்
உங்கள் கனவை நனவாக்கும்
ஜீபூம்பாக்களா நாங்கள்....
கல்விமுறை மாற வேண்டும்
கட்டுண்ட கால்விலங்கு
காணாமல் போக வேண்டும்
காத்திருந்தோம் அடுத்த தலை முறை
கனவையேனும் நனவாக்க....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-Apr-14, 9:26 pm)
பார்வை : 118

மேலே