அவள் எனக்கு வேண்டும்-6

அவள் உள்ளே ஏறி மெல்ல நகர்ந்து மறு கதவை திறந்து கொண்டு இறங்க, என்னவென்று தெரியாமல்
"என்னாச்சு?", என்றான் திகைப்பாக...
அவள் பதில் பேசாமல் முன்னால் வந்து அமர்ந்தாள்.
வண்டி கிளம்பியது.
பார்த்து பார்த்து எல்லாம் நல்லதே செய்பவன் நிச்சயமாக நம்மையும்
நன்றாக பார்த்துப்பான் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்தாள்.
“நிச்சயமாக நல்லா பார்த்துப்பேன்”, என்றான் அவன்.
“ம்.. என்ன சொன்னீங்க?”
“ம்.. உன்னோட மனவோட்டத்தை சொன்னேன்”
மௌனமாக புன்னகைத்தவளின் மனதில் இடம் பிடித்த சந்தோஷத்தில் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தினான்.
“ஏன் இங்கே நிறுத்தினீங்க?”
“இறங்கு”
“ம்கூம்”, என்று தலையாட்டியவளை பார்த்து மெதுவாக சொன்னான்,
“மகாராணிய கடிச்சி திங்கமாட்டேன்.. இறங்கலாம்" என்றான் அதிகாரமாக
இறங்கியவளை “ஒரு காபி சாப்டுட்டு போலாம்”, என்றான்.
“ம்கூம்.. வீட்டுக்கு போயிடலாம்"
சட்டென அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றுவிட்டான்.
அவன் கை பட்டதும் அவள் கைகள் நடுங்கியதை கவனித்தவன்
அமர்ந்து “இரண்டு காபி”, என்று ஆர்டர் செய்தான்.
“வாஷ்பேஷின் அங்கிருக்கு போய் முகம் கழுவிவா”, என்றான்.
எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள், அவன் ஏதோ புத்தகத்தை திருப்பிக்கொண்டு இருப்பது பார்த்து "எப்படி இவனால் முடிகிறது நம் மனதின் ஓட்டத்தை தெரிந்துகொள்ள", என்று நினைத்தாள்.
“ம்.. உன் நடுக்கத்தை வைத்துதான்”, என்றான்.
இரண்டுபேருமே ஒன்னும் பேசாமல் மௌனமாக வீடு வந்தனர்.
பாட்டியிடம் நடந்தவற்றை கூறிவிட்டு மாடிக்கு சென்றான்.
பாட்டி நடந்தவற்றை தாத்தா வரவும் சொல்ல, “நான் அங்கேருந்துதான்
வரேன்”, என்றார்.
“ஓ தாத்தா! நீங்க எப்ப மருத்துவமனைக்கு வந்தீங்க? நான் பார்க்கலையே”
“ம்.. நான் உன்னப்பார்த்தேனே”
அதற்குள் பக்கத்துவீட்டில் இருந்து ஆள் வந்து, “என்ன தாத்தா! குழந்தையும் தாயும் நல்லா இருக்காங்களா?”, என்று கேட்டனர்.
சிவா வெளியில் கிளம்பி சென்றதும்.. தாத்தா பாட்டியிடம்
சொல்லிக்கொண்டிருந்தார்.
“என்னப்பய பார்க்கவேயில்லை கிழவி.. கோமதியோட காபி ஷாப்ல
உட்கார்ந்திருந்தான்”, என்றார்.
“என்னங்க! உங்களுக்கு சம்மதமா..!”, என்று பாட்டி இழுக்க,
சிரித்துக்கொண்டே
“ம் ம் எல்லாம் நம்ம ஏற்பாடு தானே.. சரி அத விடு.. அப்புறம் பேசுவோம்”, என்று எழுந்து சென்று விட, மறு நாள் மருத்துவமனை செல்ல பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் சேர்ந்து வர, இவன் கோமதியை அழைக்க போனான்.
அவள் வீடு பூட்டிருக்க கலக்கத்துடன் வந்தான்.
பாட்டி அவன் முகத்தை பார்க்க காரணம் சொன்னான்.
“சரி விடு.. அவள் போயிருக்கலாம் நீ வண்டியை எடு”, என்று சொன்னார்.
மருத்துவமைணை வாசலில் அவள் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
இவர்களை பார்த்து, “பாட்டி” என்று அவள் ஓடி வர,
“ஏன் சொல்லாமல் வந்தாய்?” என்பது போல் அவன் ஒரு முறை முறைத்தான்.
கோமதியிடம் பேசிக்கொண்டு இருந்தவன் இவர்களை நோக்கி வர,
பாட்டிக்கி தூக்கி வாரிப்போட்டது.
சுதாரித்துக் கொண்டு “சிவா! இதுதான் கோமதியோட தாய்மாமன்”, என்றாள்.