சிறப்புக் கவிதை 39 லம்பாடி புதிதாய் முளைத்த பழைய பூ

இன்றைக்கு
இப்படியொரு சந்திப்பு
நிகழுமென்று
நாமிருவரும்
நினைத்திருக்க மாட்டோம் !

எவனோ ஒருவனின்
மனைவியாக நீயான பின்பும் -
எவளோ ஒருத்தியின்
கணவனாக நானான பின்பும் -

கால வெள்ளத்தில்
எதிரெதிர் திசையில்
அடித்துச் செல்லப்பட்டவர்கள்
ஒரு கோடைகால
ரயில் பிரயாணத்தில்
எதிர் எதிரிருக்கையில்
கரையொதுக்கப் பட்டிருக்கிறோம் !

பார்த்த திசையெல்லாம்
நீக்கமற நிறைந்திருந்த நீ
எதிரிருக்கையிலிருந்தும்
பார்வைகளைப் பரிமாறிக்கொள்ளும்
திராணியின்றி -
ஒரு கைதேர்ந்த மீனவனின்
கட்டு மரச் செலுத்துதல் போல்
அருகருகே பயணித்தும்
மோதிச் சிதைத்துவிடாமல்
பார்வைப் படகை
வேறு பக்கம் செலுத்துகிறோம் !

பிறரறியாமல்
மௌனமாய் முளைத்த
கடந்த கால நினைவுகளில்
ஒன்றிரண்டு தலை தூக்கின
மனதிலிருக்கும்
ஏக்கத் துக்கம்
விழி வழி சிதறிவிடா மலிருக்க
கொலை வெறியுடனவற்றின்
குரல் வலை நெரிக்கும்
பிரயத்தனத்தில்
முக்கால்வாசி ஒழிந்த
நிம்மதியில்
அப்பர் பர்த்தேறி
விழித்திரை மூடினேன்
மனத்திரை விலகி
காட்சிகள் விரிந்தன !

'' உன் சங்குக் கழுத்தின்
சந்தன வியர்வையை
ஒற்றியெடுத்த கைக்குட்டையை
சலவை செய்யாது
நான் பாதுகாத்தது ''

'' ஆளில்லா கோவிலில்
அடி மேல் அடி வைத்து
நவக்கிரகங்களை
நாம் சுற்றிய சுற்றில்
நவக்கிரகங்களுக்கே
தலை சுற்றியது ''

போன்றவை உயிர்பெற்று
ரயிலை விட வேகமாய்
மனத்திரை ஓடியது
நான் விழி மூடத் தயாரானேன் !

நம்மை போல்
இறுதிவரை இணையமுடியா
தண்டவாளங்களின் மேல்
ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது -
தூங்க மறுத்து அடம்பிடிக்கும்
உன் மகனின் அழுகை
ரயில் சத்தத்தை விட
அதிகமாகத் தொடர
அழுகையை நிறுத்த
அதட்டலுடன் உன் மகனின்
பெயரை
உன் கணவன் உச்சரிக்கிறான் -
விரிசலிட்ட தண்டவாளத்தின்
தடம் புரண்ட ரயிலென
சிதறி சின்னாபின்னமாகிப்
போகிறேன் நான்
''அவன் உச்சரித்து
என் பெயரை "-
மிகுந்த சிரமங்களுக்கிடையில்
என்னை மறுசீரமைத்து
தூங்க முயற்சிக்கிறேன்
தோல்வியே மிஞ்சியது -
ரயிலையும் (உ )என்னையும்
தவிர அனைவரும்
தூங்கிப்போயினர் !

காலையில் டீ , காபி ,பேப்பர் சத்தத்தில்
அனைவரும்
கண் விழிக்கின்றனர்
சேர வேண்டிய
இறுதி ஸ்டேஷன்
வந்து சேர்க்கிறது -
என் மனைவி
தூங்கிக் கொண்டிருந்த
என் மகளின் பெயரைச் சொல்லி
எழுப்புகிறாள்
'' அது உன் பெயராகயிருக்கிறது "'
இறங்கும் வரை
எது நிகழ்ந்து விடக்
கூடாதென நினைத்திருந்தேனோ
அது
நடந்தே விட்டது !

உன் கண்களை பார்க்கிறேன்
நீயும் பார்க்கிறாய்
யாரிடமும் அனுமதிபெறாமல்
திடீரென மீண்டும்
முளைத்து விடுகிறது
அன்று முளைத்த அதே மலர் !

அனைவரும்
கொண்டு வந்த
சுமைகளை
இறக்கிக்கொண்டிருக் கிறார்கள்

இறக்கி வைக்க முடியா
புதிய சுமையோடு நாமிருவரும்
இறங்கிக் கொண்டிருக்கிறோம்
ரயில் பெட்டியில்
அனாதையாய் நிற்கிறது
புதிதாய் முளைத்த
பழைய பூ .

எழுதியவர் : லம்பாடி (26-Apr-14, 1:33 pm)
பார்வை : 124

மேலே