சிறப்புக் கவிதை 38 லம்பாடிஅன்னை இல்லம்

கோவிலுக்கான
அன்பளிப்புப் பொருளில்
பக்தியைப் பறைசாற்ற
"உபயம் " - போடும்
சராசரி பக்தனைப் போல் ,
நான் கட்டிய
வீட்டிக்குப் பெயர் வைத்தேன்
''அன்னை இல்லம் ''- என்று !
அதே
நான் தான்
உன்னை சிறை வைத்தேன்
முதியோர் இல்லம் சென்று !

அங்கிருந்து
உடனடியாக வருமாறு
மடல் வந்தது -
நான் வருமுன்னர்
உந்தன் உடல் வந்தது !

உன்னை அமர வைத்து
அழகு பார்க்க வேண்டிய
வீட்டில்
உன்னை அமரராக்கி
அழுது பார்த்துக்கொண்டிருக்கிறேன் !

வண்ண மீனுக்குக் கூட
பாதுகாப்பாய்
கண்ணாடி தொட்டி செய்து
தினம் ,தினம்
தண்ணீர் மாற்றத் தெரிந்த எனக்கு
உன் கண்ணீரை
மாற்றத் தெரியாததால்
நெஞ்சுக்குள் வேர்த்தாயோ
நின் இன்னுயிர் நீர்த்தாயோ ?

மீனுக்குக் கூட
ஏரி, குளம் , ஆறு உண்டு
எனக்கு
உன்னை விட்டால்
மகனே யார் உண்டு ?
என
தனிமையில் வெந்தாயோ ?
சடலமாய் வந்தாயோ ?

தேக்கு மரம் இளைத்து
கதவு , ஜன்னல்
மின்னச் செய்தேன்
உன் தேகம் இளைக்க
எனை வளர்த்தாய்
உனக்கு நான்
என்ன செய்தேன் ?

பெற்றெடுத்த தெய்வமுன்னை
பேணாமல் விட்டு விட்டு
பூஜையறை கட்டி வைத்து
அதை வெறும்
பூஜ்ய அறையாய்
ஆக்கி விட்டேன் !

புத்தகத்தைக் கூட
காப்பாற்ற
அலமாரி செய்யத் தெரிந்த
எனக்கு
என் பெத்தகத்தை
காப்பாற்ற
திராணியற்றுப் போனதால்
ஆண்மகன் (?) நானிருக்க
அனாதையாய் போனாயோ ?

என் வயதான
வசந்த மலருன்னை
தனிமைச் சிறையில்
வாட விட்டுவிட்டு
என் வீட்டுத் தோட்டத்தில்
வாடிய மலர்களுக்கு
எத்தனையோ நாள்
தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த
நானொரு மகா பாவியம்மா !

வாடகை வீட்டில்
மழைக்காலங்களில்
தொப்பலாய் நனைந்து
வாசல் படி ஏறுகையில்
ஓடோடி வந்து முந்தானையில்
தலை துவட்டுவாயே !
உன்னை கண்ணீரில்
நனைய விட்டு ,விட்டு
கண்ணாடி ஏற்றிய காரில்
ஒரு சொட்டு கூட
நனையாது
போர்டிகோவின் கிரானைட் படிகளில்
வழுக்கிக் கொண்டு
வாசல் நுழைந்த
நானொரு
இரக்கமற்ற அரக்கனம்மா !

குழந்தையைத் தொலைத்த
தாய்மார்களைத் தெரியும்
நானோ
தாயைத் தொலைத்த குழந்தையம்மா !

புத்தனுக்குப் போதி மரம் -
அசோகனுக்குப் போர்க்களம் -

உன் மகனுக்கு -


"சொந்த வீடு ".

எழுதியவர் : லம்பாடி (26-Apr-14, 1:28 pm)
பார்வை : 65

மேலே