சிறப்புக் கவிதை 40 லம்பாடி பழைய வீடு
பழைய வீடு
முன்பிருந்த
தன் புராதான அடையாளங்களை
முழுவதுமாக
இழந்து கிடக்கிறது
எனது அந்தப் பழைய வீடு !
நரை திரைக்
கூரை மயிருதிர்த்து
சுருக்க ரேகைகளான
சுவர்களின் விரிசல்களில்
ஓராயிரம் கதை பதுக்கி -
ஒரேயொரு ஆல் பதுக்கி
தலை முறை பல பார்த்த
வயோதிகப் பெரு வீடு
பழம்பெரும்
வாசம் பொதிந்து
சுவாசிப்பாரற்றுக் கிடக்கிறது !
அங்கு
நான் கால்பதிக்கும் போதெல்லாம்
புதைந்து கிடக்கும்
பால்யப் பெருவெளி
என் பாதவழி மேலேறி
சூல்கொண்டு , சூல்கொண்டு
கலைகிறது
துக்கமும் சோகமுமாய் !
நான் தவழ்ந்து தடுக்கி
ஈரமண் இட்லி செய்து
குழிபறித்து கோலியாடிய
வான் பார்த்த
நிலா முற்றத்திலின்று -
தானாய் பூத்து நிற்கும்
எருக்கஞ்செடி வேர்களோடு
பாட்டி சொன்ன
வல்லரக்கர்களும் , நல்லதங்காளும்
புதைந்து கிடக்கிறார்கள் !
பத்திரமாய்
என் தூளிதாங்கி
ஆடவிட்ட
உத்திரம்
தானாடிக்கிடக்கிறது
தாங்குவாரில்லாமல் !
என் பிஞ்சுவிரல் பிடித்த
கரித்துண்டின் கோணல் எழுத்துக்களை
தன் வெண் முதுகில்
பதிந்து கொண்ட
மண் சுவரின் பிரிவு விரிசல்களில்
இடம் பெயர்ந்த
சொந்தங்களின்
ஏக்கப் பெருமூச்சின்
சூடு தனியாதிருக்கிறது இன்றும் !
ஆள்பார்த்து
நல்ல நாள் பார்த்து
நட்டு வைத்த நிலையின்
கடைக்காலில்
என்னை சுமந்து
அங்குமிங்கும் கிரீச்சிட்டு
ஆடியக் கதவுத் தேர்
தனது அச்சு முறிந்து
மக்கிக் கிடக்கிறதொரு ஓரமாய் !
முதுகுக்குத் தோள் கொடுத்த
தூணும்
தலை சாய மேடளித்த
திண்ணையும்
ஆட்கொள்ள ஆளின்றி
புலம் பெயர்தலின் வலிசுமந்து
தூர்ந்து போய்க்கிடக்கிறது !
சிதிலமடைந்த
அவ்வீடெங்கிலும்
என் வாஞ்சையுடனான
ஓர் உருண்டை
இன்னமும்
உருண்டு கொண்டேயிருக்கிறது -
எதுவாகினும்
பிரிதொரு நாட்களின்
எத்தனையோ சுகப்படுக்கைகள்
பழகிய தாயின் மடிபோல்
உணர்வதில்லை .