சிறப்புக்கவிதை 51 தேவா சுப்பையா திசம்பர் 6

டிசம்பர் 6 ...!!
மதமேறிப் போன
மிருகங்கள் வடித்து வைத்த
இரணத்தை வருடந்தோறும்
கிளறிச் செல்கிறது
இந்த டிசம்பர் 6...!

நம்பிக்கை என்ற
பெயரில் மிருகங்களின்
வெறியாட்டத்தை பொறுத்துக் கொண்ட
தியாக நாளாய் எப்போதும்
இரணங்களை மறைத்துக் கொண்ட
புனிதனாய் புன்னகை செய்கிறது
இந்த டிசம்பர் 6!

கடவுளைத் தேடி
பயணிக்கையில் இடையில்
மனிதன் மிருகமாய் மாறி
சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின்
கறையை அழிக்கவே முடியாமல்
இன்னமும் இடிந்தே கிடக்கிறது
என் சகோதரர்களின் நம்பிக்கை!

கடவுளை மனதுக்குள்
வைக்கத் தெரியாதவர்கள்
அரசியலுக்குள் அழைத்ததின் கோரமா?
இல்லை...
கடவுளென்றால் யாரென்று அறியாத
விலங்கு மனத்தின் அகோரமா?

விடை தெரியா கேள்வியோடு
விடியலைத் தேடும் மனிதனாய்
மனதுக்குள்ளேயே பிரார்த்திக்கிறேன்...
இறைவா...என்றாவது ஒரு நாள்
மனிதர்களின் மனதில்
பூ பூக்கச் செய்து...
அன்பால் உயிர்த்தெழச் செய்
மனித நேயத்தையும்...
இடிந்து போன நம்பிக்கையையும்....

எழுதியவர் : தேவா சுப்பையா (27-Apr-14, 10:42 pm)
பார்வை : 94

மேலே