ஒரு காதல்கோரிக்கை

கண்மூடி
உறங்கிக் கொண்டிருக்கும்
எனக்கு
இமை சேர்த்து
உறங்கக்கற்றுகொடு !

===========================================

மெழுகுவர்த்தியிடம்
வெளிச்சம்
பார்க்குமெனக்கு
மெழுகுவர்த்தியிடம்
தியாகம் பார்க்கக்
கற்றுக்கொடு !

===========================================

பயணித்துக் கொண்டிருக்கும்
என் கால்களுக்கு
நடக்கக் கற்றுக்கொடு !

============================================

விட்டம்
பார்த்துக்கொண்டிருக்கும்
என்னை
வானம் பார்க்க
வைப்பாயா ?

===========================================

உரையாடும்
என் உதடுகள்
பேசுவதெப்போது ?

===========================================

விட்டில் பூச்சிகளை
வேடிக்கை பார்க்கும்
என் கண்கள்
இனி
கண்ணீர் சிந்தி
விளக்கணைக்குமா ?

===========================================

என் சிரிப்பு
எப்போது
புன்னகையாகும் ?

===========================================

மலர் பறிக்கும்
என் கைகள்
இனி
அம்மலர்களுக்கு
ஒரு ஹாய்
சொல்லட்டுமே !

===========================================

என் டைரியின்
வரவுசெலவுக் குறிப்புகள்
எப்போது
கவிதையாகும் ?

===========================================

காகிதத்தில்
இராக்கெட்
செய்து விடுமெனக்கு
காகிதத்தில்
கப்பல் செய்யக்
கற்றுக்கொடேன் !

===========================================

தொலைக்காட்சியில்
ரஸ்லிங்
பார்க்குமென்னை
சன் மியூசிக்
பார்க்க வையேன் !

===========================================

சிகெரெட்
பிடிக்குமென்னை
சிந்தனை பிடிக்க
வைப்பாயா ?

===========================================

திரைப்பட
சோகத்திற்கு
நான் செய்யும்
பகடிகள்
இனி கண்ணீராகுமா ?

===========================================

தூண்டில் பிடிக்கும்
என் கைகளுக்கு
துடுப்புப் போடக்
கற்றுக்கொடு !

===========================================

மூச்சுவிடும்
என்னை
சுவாசிக்க வை !

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Apr-14, 11:15 am)
பார்வை : 132

மேலே