வாடைக் காத்து
![](https://eluthu.com/images/loading.gif)
ஊரெல்லாம் ஒஞ்சும் கூட
பாசி படிஞ்ச மனசு மட்டும்
தூங்காம வதங்க
ஒத்தப் பனமரம்
ஊடால
வாடக்காத்து வந்து
காதோரம் சிலு சிலுங்க
வெட்டிப் போட்ட நொங்குபொல
வெள்ளிநிலா பளபளங்க
கட்டிவச்ச நெஞ்சுக்கு
காலு ரெண்டு மொளைச்சு வர
ஒன்னை மட்டும்
எங்கும் காங்கலையே
ஆச மாமா
நீ வச்ச நாத்தெல்லாம்
நா வச்ச ஆச போல
மச மசன்னு வளந்து நிக்க
அறுப்புக்கும் ஆள் விட்டாச்சே
நீ மட்டும் இங்கில்லையே
நேச மாமா
பட்ட மரங் கூட
கிளைச்சு வருமே
பக்கத் தொணையா நீயிருந்தா
பசுந் தங்கயெலையெல்லாம்
தரையெல்லாம் பறந்து கெடக்க
பாவி நான் இங்க
பஞ்சாப் பறக்கேனே
ஆச மாமா
வீசும் காத்தெல்லாம்
ஒன்பேரை முணுமுணுங்க
பேசும் கிளிகூட
ஒன் பாத பாத்திருக்க
பாசமெல்லாம் வேசமாச்சா
நேசமாமா !
காத்திருந்து காத்திருந்து
கண்ணெல்லாம்
பூத்திருந்து
சாம்பலாக
கடைவழியே போப்போறேன்
அங்கயாவது
வருவியா
ஆசமாமா !