மரிபடும் உணர்வுகள்
எவருக்கும் புலப்படாத
பிரிவு
நம்மை நடத்துகிறது !
வேறுபட்ட திசைகளினூடே
நமக்கான அன்றாடங்களில்
நம்மைச் சாராத
எதுவுமே சாத்தியமெனப்படாதபோது
எனது நினைவுகளுடன்
நீ என்னை வெறுத்தும்
உனது நினைவுகளுடன்
நான் உன்னை வெறுத்தும்
நீ நானாகவும்
நான் நீயாகவும்
நடமாடுகிறோம் !
நடமாடுகையில்
மரிபடும் உணர்வுகளை
காலடியிலிட்டு
பிறரறியாமல் மிதித்தழுத்தி
கதறலின் குரல்வளை நெரித்து
பெருந்துயர் தள்ளி
நம்மைக் கடந்து
போய்க்கொண்டிருக்கிறோம் !
நமக்கான பிரிவுகளில்
உன் மேல்மிதப்புகளின்
இடையூறுகளின்றி
தேங்கியுள்ள அகற்றவியலா
படிமமென
உன்னுடைய கீழ்தளங்களில்
நான் தங்கியுள்ளேன் !
ஆயினும் -
நம்
நிரந்தரப் பிரிவின் தேரோட்டம்
ஒரு வெள்ளோட்ட மென
நமதிருவரின் திசையிலன்றி
விதியின் திசை நோக்கி
மெல்ல நகரத் துவங்கிவிட்டது
இனி
நடுநிசியில் ஒலிக்கின்ற
ஏதோவோர் சிறு பறவையின்
கதறலென
வெகு தூரத்தில் உன்னை விட்டு
ஒரு சிறு புள்ளியென
மறைந்து போகலாம் நான் !
ஆயினும்
எனக்குப்பிடித்த பௌர்ணமி
நிலவிலோ -
அல்லது
என் கவிதைகளைப் போல
எங்கேனும் கண்ணுற்றாலோ-
அல்லது
நமதிருவருக்கும்
பிடித்தமான பாடல்களின்
வரிகளில் லயிக்கயிலோ
என்னை நினைவுகொள்
உன் மனதின்
ஏதோவோர் ஓரத்தில்
துளியேனும் நானிருந்தால் .