சொல் மனிதா சொல் - கே-எஸ்-கலை
சாத்திரம் படிப்பான் சாதிகள் மறுப்பான்
சபைகளில் ஏறி நின்று - அட
கோத்திரம் மாறி புத்திரன் போனால்
கொலையும் செய்வான் இன்று !
கண்ணே என்பான் முத்தே என்பான்
காதலில் விழுந்த அன்று ! - அட
காரியம் முடிந்ததும் எவன்டா சொன்னான்
பொண்ணுங்க தேவதை என்று ?
கடவுள் என்பான் கும்பிடு என்பான்
கஷ்டங்கள் போகும் என்று - அட
எதடா கடவுள் சொல்லடா என்றால்
முறைப்பான் முட்டாள் என்று !
காசு கொடுப்பான் நரபலி கொடுப்பான்
புண்ணியம் வேண்டும் என்று - அட
கஞ்சோ சோறோ எவன்டா கொடுத்தான்
இல்லா ஏழைக்கு இன்று ?
கஞ்சா விற்பான் கசிப்பு விற்பான்
காசு வேண்டும் என்று - அட
கட்சி தொடங்கி மந்திரி ஆவான்
காசு கூடினால் இன்று !
வாய்மை என்பான் தூய்மை என்பான்
வாக்குகள் பெறனும் என்று - அட
வென்றதும் எவன்டா நேர்மையா நின்று
ஊருக்கு உழைத்தான் இன்று ?
அவனும் சொல்வான் இவனும் சொல்வான்
அதர்மம் ஒழிப்போம் என்று - அட
எவன்தான் வென்றான் இந்தப் பூமியில்
தர்மம் காத்து இன்று ?