விடாது கருப்பு

இரவு முழுவதும் தொடர்ந்து மழை தூரிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் ஐந்து படிக்கட்டுகளில் இரண்டு படிக்கட்டுகள் நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டது. சாலை முழுவதும் ஒரடிக்கு மேல் மழை நீர். சிறுவர்கள் தடித்த தெர்மகோல் பலகையில் உட்கார்ந்து நீரில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஒரு நாய்க்குட்டி எங்கள் வீட்டை நோக்கி வேகமாக நீந்திக்கொண்டு வந்தது. அது வருவதைப் பார்த்த உடனேயே அதற்கு கருப்பு என்று நாமகரணம் சூட்டி, கைகளை ஆட்டி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதற்கு உற்சாகத்தைக் கொடுத்தோம். நடுங்கிக்கொண்டே படி ஏறி எங்களைப் பார்த்து பலவீனமாக வாலாட்டியது. இப்படித்தான் ஒரு தொடர் மழை நாளில் எங்களுக்கு கருப்பு அறிமுகமானான்.

பசித்தால் மட்டுமே எங்கள் வீட்டிற்கு வந்து உரிமையாய்க் குரல் எழுப்புவான். மற்ற நேரங்களில் தெரு முனையில் இருக்கும் சிறிய நடை பாதை பிள்ளையார் கோயிலில் படுத்துக்கொள்வான். முழுப் பிள்ளையாரையும் மறைத்துக் கொண்டு படுத்திருக்கும் கருப்பனை விரட்டுவது அவ்வளவு சுலபமல்ல. என்னதான் விரட்டினாலும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து படுத்துக்கொள்வான்.

கருப்பன் இங்கு வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. வழக்கமாக கோவிலிற்கு வரும் ஒரு வயதான முதியவர் கருப்பனுக்கு பைரவன் என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தார். கருப்பனுக்கும் அந்தப் பெயர் பிடித்து இருக்கவேண்டும். முதியவர் வந்த உடனே வாலாட்டியபடியே அவரையே சுற்றி வரும். அவர்தான் ஒரு பழைய அலுமினியத் தட்டை வீட்டில் இருந்து எடுத்து வந்து பால் ஊற்றி வைக்க ஆரம்பித்தார். orமுதலில் கருப்பனை கீழே இறக்கி பிள்ளையரை வழிபட்டவர்கள் எல்லாம், நாளடைவில் கருப்பனையும் சேர்த்து வழிபட ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் கருப்பன் நெற்றியில் குங்குமத்துடன், கழுத்தில் ஏதாவது ஒரு பூ மாலையுடன் கோயிலையே சுற்றி வர ஆரம்பித்தான். மந்தையில் நேர்ந்து விட்ட கடாய் பலி மேடைக்குக் கொண்டு போகும் போது தலை அசைப்பதைப் போல அடிக்கடி கருப்பன் தலை ஆட்டிக்கொண்டே எப்போதாவது எங்கள் வீட்டிற்கு வருவான்.

காலப் போக்கில் கருப்பனுக்கு பிரசாதமாய் பால் வழங்க ஏற்பாடாகியது. அவன் கோயில், பேருந்து நிறுத்தத்தில் இருந்ததால் காத்திருப்பு நேரங்களில்
கருப்பனைப் பார்த்து மானசீகமாக மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். ஊரில் யாரோ கிளப்பி விட்ட வதந்தியால் இப்போதெல்லாம் கருப்பனின் முன் அமர்ந்து கொண்டு தங்களின் வேண்டுதல்களையும் முறையிட ஆரம்பித்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில்தான் கருப்பன் ஒரு கடவுளின் அவதாரமாக மெதுவாக மாற ஆரம்பித்தான். கருப்பனைச் சுற்றி எங்கள் பகுதியில் ஏராளமான கதைகள் உலவ ஆரம்பித்தது. ஒரு நாள் எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் சுமதி “உங்களுக்கு ஒன்னு தெரியுமாக்கா” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பித்தாள். “போன வாரம் திங்கட் கிழமைன்னு நினைக்கிறேன். ராத்திரி ரெண்டு மணி இருக்கும். பைரவன் தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே இருந்தான்” என்று நிறுத்தி எங்களையே உற்றுப்பார்த்தாள். எல்லோர் முகத்திலும் திகில் ரேகைகள் பரவுவதைப் பார்த்த திருப்தியுடன் விட்டதைத் தொடர்ந்தாள். “ஜன்னல் வழியாப் பாத்தா, கருப்புப் போர்வையால் முழுவதும் போத்திக்கிட்டு ஒரு உருவம் கருப்பனையே உற்றுப் பாத்து உடனே நீ ஊரை விட்டுப் போடான்னு சொன்னதை என் காதாலே கேட்டேன். கருப்பன் விடாம குரைச்சிக்கிட்டே அவனோட போர்வையை கடிச்சு இழுக்க, நானும் வெளித் தாழ்வார விளக்கைப் போட அது ஓடிடுச்சு. அப்போ பைரவன் என்னைப் பார்த்த பார்வை இருக்கே. அதை வார்த்தையாலே சொல்ல முடியாதுக்கா” என்று கூறும் போது சுமதி கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவயப் பட்டதைப் பார்த்த எங்களுக்கே ஒரு திகில் கலந்த பக்தி ஊற்றெடுத்தது.

இரண்டு மாதங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்த அறுபது வயதுக் கீரைக்காரப் பாட்டியும் அவள் பங்கிற்கு ஒரு சிறிய திரி வெடியை பற்ற வைத்துப் போட்டாள். அவள் ஐந்து வயதுக் குழந்தையாக இருக்கும் போது அந்தப் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் ஒரு துடிப்பான பைரவர் கோயில் இருந்ததாகவும், நிலத்தைப் பிளாட் போடும் போது அதை யாரோ இடித்து விட்டதாகவும், அதைத்தான் கருப்பன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்துகிறான் என்றும் கூறினாள்.

நாளடைவில் கருப்பனைக் காண பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. பக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க கருப்பனுக்குப் பிடிக்கும் என்று பாலையே பிரசாதமாக வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். வெள்ளி சனிக் கிழமைகளில் மட்டும் கருப்பனைக் குளிப்பாட்டியவர்கள், மார்கழி மாதம் முழுவதும் காலை மாலை இரு முறையும் கருப்பனின் பக்திக் குளியலிற்கு ஏற்பாடும் செய்தார்கள். நெற்றியில் வழிந்திறங்கும் குங்குமத்துடன் மார்கழிக் குளிர் தாங்காமல் உடம்பை ஒரு சுருள் வில்லாகச் சுறுக்கி எப்போதும் நடுங்கியபடியே படுத்திருப்பான் கருப்பன். முதலில் பால் வைத்தவுடன் ஆர்வமாகக் குடித்த கருப்பன் நாளடைவில் அதில் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. மாற்று உணவுத் தேடலிற்காக ஒரு நாள் நகர் வலம் வரும் போது ஒரு கறிக்கடைக்கு முன் நின்று வேடிக்கை பார்த்த கருப்பனை “என்ன கருப்பா, ஏதோ கறி சாப்பிடற மாதிரி நாக்கை உருட்டுறே. உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?’ என்று கருப்பனைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டு காத்திருந்த மற்ற நாய்களுக்கு எஞ்சிய கொழுப்பையும், எலும்பையும் போட்டான் கறிக்கடைக்காரன். அந்த இடத்தை விட்டு அமைதியாக வெளியேறிய கருப்பனுக்கு முதன் முதலாக தான் ஏதோ ஒரு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் தெரிந்தது. தட்டில் எப்போதும் இருக்கும் புளித்த பாலைக் காண கருப்பனுக்குக் குமட்டியது.

மக்களின் குறைகளை எப்போதும் கேட்பதால் கருப்பனின் காதுகளில் நிரந்தரமாக ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. தான் ஒரு மன நோயாளியாக மாறிக்கொண்டு வருகிறோம் என்பதை உணர ஆரம்பித்தான் கருப்பன். இவ்வளவு பெரிய பூமியில், மக்களுக்கு அருள் பாலிக்கும் கடவுளாக இருப்பதை விட சராசரி ஜீவனாய், தனக்குப் பிடித்த உணவு உண்டு, தனக்குப் பிடித்த நட்பைத் தேடி, சக நண்பர்களின் முன் பல் தெரிய கோபத்தில் சண்டை போட்டு சராசரி வாழ்க்கைக்கு தன் மனது ரகசியமாக ஏங்குவதை நினைத்து ஒரு முடிவிற்கு வந்தான்.

திடீரென்று கருப்பனைக் காணவில்லை. காலை அந்த வழியே சென்றவர்கள் அவர்கள் பங்கிற்கு, தாங்கள் கருப்பனை கோயில் சாலையில் போய்க்கொண்டு இருப்பதைப் பார்த்ததாகவும், சிறிது தூரம் சென்ற பிறகு அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் திடீரென்று கருப்பன் மறைந்து விட்டதாகவும் கூற, அதைக் கேட்டவர்கள் வேகமாகக் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். இதை அறிந்த ஊர்ப் பெரியவர்கள், இது ஊருக்கு நல்லதில்லை என்றும், உடனே கருப்பனை மன சாந்தி அடைய வைக்க ஒரு கோயில் கட்டியே ஆகவேண்டும் என்றும், அதற்கான நிதியை மக்களிடம் திரட்ட ஆரம்பித்தார்கள். எப்போதோ எதிர் வீட்டு கோவிந்தன் தன் கைபேசியில் கருப்பனைப் புகைப்படம் பிடித்ததை பிரிண்ட் போட்டு ஒரு பிரதி பத்து ரூபாய் என்று மக்களிடம் விற்க ஆரம்பித்தான்.

கீரைக்காரப் பாட்டியும் கருப்பனின் வாழ்வை ரசிப்பான ஒரு பக்திக்
கதையாக ஜோடித்து பாக்கு இடித்துக் கொண்டே அடுத்த தலை முறைக்கு நகர்த்திக் கொண்டிருந்தாள்.

எழுதியவர் : பிரேம பிரபா (2-May-14, 1:10 pm)
Tanglish : vidathu karuppu
பார்வை : 425

மேலே