ஜாதிகள் இல்லையடி பாப்பா

2050 ஆம் ஆண்டு. நம் நாடு விண்வெளியில் தன் ஆதிக்கத்தை முழுமையாக நிறுவிய பொன்னான காலம். அனைத்து துறைகளிலும் விஞ்ஞானத்தின் பன்முக வளர்ச்சி. இடப்பற்றாக்குறை காரணத்தினாலும், ஏற்றிக்கொண்டு போக ஏதுவாக இருப்பதற்காகவும் அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ விளைவிக்கப்பட்டது. குழந்தைகள் பிறந்தவுடன் அவைகளின் இடது புஜத்தில் மிகச் சிறிய மின்னணுத்தகடு பொருத்தப்பட்டு அவர்களின் பிறந்த தேதியிலிருந்து , தேக நிலை, கல்வி, வேலையென்று பல புள்ளிவிபரங்கள் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டுமென்று சட்டரீதியாக வலியுறுத்தப்பட்டது.
மாற்று எரிபொருள் வளர்ச்சி, குரல் மூலம் கடன் அட்டைகளின் பன் முகப் பயன்பாடு, mமனப் பயிற்சியால் அடுத்தவர்களை ஆளும் யுக்தியின் முதல் கட்டப் பணியின் மாபெரும் வெற்றியென்று நம் நாடு பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்க, சாதிய விஷயத்தில் மட்டும் வழக்கம் போல துளிகூட மாற்றம் இல்லாமல் பழைய நிலைப்பாட்டிலேயே அதிக வலுவுடன் இருந்தது. கிளைகள், உட்கிளைகளெனப் பிரிந்த ஜாதிகள் ஒன்றுக்கொன்று போராடி தத்தம் ஆளுமைகளை நிறுவப் போராடிக்கொண்டிருந்தது. அரசியல் கட்சிகள் வெற்று ஜாதியத் தொகுப்புகளாகவும், குறிப்பிட்ட சாதி மக்களின் பிரதிநிதிகளாக மட்டுமே வெளிப்படையாகச் செயல்பட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் சமநீதி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஒரு மாபெரும் விஞ்ஞானி.

சென்னை தரமணியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட மனித மனவள மேம்பாட்டு ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றும் டாக்டர். குப்புசாமிக்கு லேசாக வியர்த்துக்கொட்டியது. அவர் தன் ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். தன் இரு உள்ளங்கைகளையும் இளஞ்சூடு உணரும்வரை இறுகத் தேய்த்து வெளிப்பட்ட கதகதப்பான சூட்டை கண்களில் மெதுவாக ஒற்றிக்கொண்டார். இரண்டு வாரத் தூக்கமின்மையால் ஏற்பட்ட கண் எரிச்சல் சிறிது குறைந்தது போலிருந்தது. ஒருபுறம் அவரின் உதவியாளர் விசாலமான மேஜையில் சிதறிக் கிடந்த புத்தகங்களிலிருந்து அடிக்கோடிட்ட குறிப்புகளைக் கணினியில் ஏற்றிக்கொண்டிருந்தார். டாக்டர். குப்புசாமி தன் இருக்கையின் சாய்மானத்தை அதிகப்படியான சாய்வு நிலைக்குத் தளர்த்தி கண்களை மூடிக்கொண்டிருந்தார். .

எப்படியாவது இவரது ஆராய்ச்சியை ஓரம் கட்டி நீர்த்துவிடச் செய்ய பல அரசியல் கட்சிகள் தன் முழுசக்தியுடன் போராடியது. பல தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி டாக்டர். குப்புசாமி விடாமுயற்சியுடன் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

டாக்டர். குப்புசாமி ஆளுயரக் கண்ணாடியில் ஒருமுறை தன்னை பெருமையாகப் பார்த்துக்கொண்டார். காதோரம் இழைந்தோடிய நரை முடிக் கற்றைகளை லேசாகத் தடவி தனக்குள்ளே மர்மமாகச் சிரித்துக்கொண்டார். அவருடைய மனைவிக்கு மிகவும் பிடித்த சாம்பல் நிறக் கோட்டில் இன்று அவர் கூடுதல் கம்பீரமாகத் தெரிந்தார்.
தேவைகேற்ப குறைந்த அளவே அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தின் நுழைவாயிலைக் கடந்து டாக்டர்.குப்புசாமி தன் சகாக்களுடன் உள்ளே நுழைய, அங்கத்தினர்களின் கைதட்டல் ஒலி சிறிதும் பிசிறில்லாமல் ஓரே சீராக அரங்கம் முழுவதையும் நிறைத்தது. சபையோரின் மெல்லிய சலசலப்பு முற்றுமாகத் தணிந்து அனைவரது கண்களும் இப்போது டாக்டர். குப்புசாமியின் பக்கம் திரும்பியது.
“சகோதரர்களே, என் ஆராய்ச்சி முடிவு குறித்து விவாதிக்க நாம் இங்கு குழுமியிருக்கிறோம். மானுடம் தழைக்க, புதுச் சமச்சீர் சமுதாயம் படைக்க இதைவிட ஒரு நல்ல சந்தர்பம் நமக்குக் கிடைக்காது. ஆண்டாண்டு காலமாக ஜாதிகளை முன்னிறுத்தி அப்பாவி மக்களின் மனங்களை வேட்டையாடி ஏமாற்றியது போதும். என் பத்து வருட இடைவிடாத ஆராய்ச்சியின் பயன் தான் உங்களுக்கு நான் இப்போது அறிமுகப்படுத்தப் போகும் மனமிளக்கி மாத்திரை.” டாக்டர் குப்புசாமியின் அறிமுக உரைக்குப் பிறகு சபையில் மெல்லிய சலசலப்பு கூடியது

மனமிளக்கியா அல்லது மல இளக்கியா? என்று தன் பெருத்த உடலின் வயிற்றுப் பகுதியை மட்டும் குலுக்கியபடி சப்தமில்லாமல் சிரித்தார் டாக்டர்.ஜெயின். டாக்டர் குப்புசாமி தன் திடமான குரலில் தொடர்ந்தார். “டாக்டர் ஜெயின் கூறியது போல் இது சாதி சார்ந்த மல இளக்கிதான். மனிதனின் மனதிலிருக்கும் சாதிக் கசடுகளை வெளியேற்றி அவனுடைய குண இயல்புக்களைச் சாதி சாரா பக்குவத்திற்குக் கொண்டுவரும். ஒருவர் இந்த மனமிளக்கியை உட்கொண்டவுடன் அவரின் சாதியம் குறித்த எண்ணங்கள் முழுவதும் அவருடைய ஆழ்மனத்திலிருந்து ஒருசேரக் களையப்பட்டு இந்தப் புவியின் அன்பான பிரஜையாக உருமாறிவிடுவார். மனமிளக்கியை உட்கொண்ட ஒருவர் அரை மணி நேர ஆழ்நிலைத் தூக்கத்திற்குட்படுவார். அந்த நேரம் அவரின் ஒவ்வொரு செல்களின் உட்சுவர்களில் உறைந்திருக்கும் சாதியக் கொழுப்புக் கசடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு அனைத்து செல்களுக்கும் நிரந்தரமான பாதுகாப்புக் கவசம் போர்த்தப்படும். ஒவ்வொரு மரபணுவிலும் சாதி மதம் குறித்த குறியீடுகளனைத்தும் நீக்கப்பட்டு மீண்டும் சாதி சாரா எண்ணங்களால் திருத்தி அடுக்கப்படும். சுறுக்கமாகக் கூறினால் ஒருவரின் மனதில் இருக்கும் சாதியக் கசடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு விஞ்ஞான முறையில் அடிக்கப்படும் ஒட்டடை, அவ்வளவுதான்”. டாக்டர். குப்புசாமியின் விளக்கம் மிகவும் எளிமையாக இருந்தாலும், இந்த முயற்சி எப்படி சாத்தியப்படும் என்ற கேள்வி அனைவரின் முகத்திலும் கேள்விக் குறியாகத் தெரிந்தது.
மெலிந்த ஆனால் உறுதியான தோற்றத்திலிருக்கும் ஒருவரை டாக்டர். குப்புசாமி அருகில் இருக்கும் ஓய்வறையிலிருந்து உடன் அழைத்து வந்தார். ஒரு காலத்தில் அந்த நபர் பெரிய பலசாலியாக இருந்திருக்கவேண்டும். பளிச்சென்று ஆரஞ்சு நிறத்தில் உடையணிந்து வந்தவர் மேடையேறிப் பேச ஆரம்பித்தார். ஆழ்ந்த குரல், அனுமதிக்கப்பட்ட இடைவேளிகளுடன் வார்த்தைகளை தேடித் தேடி மிகவும் நிதானமாகப் பேசினார்.

“அன்பானவர்களே நான் ஒரு மிகச் சாதாணமான மனிதன். டாக்டர்.குப்புசாமியின் இந்த மாபெரும் முயற்சியில் எனது பங்கீடு ஒரு சிறு துளிதான் என்றாலும் அது ஒரு சகாப்தத்தின் முதல் மைல்கல். அவர் கண்டுபிடித்த மனமிளக்கியை உட்கொண்ட பிறகு சாதிகள் துறந்த தூய்மையான பிரபஞ்ச ஒளியில் மிகப் பெருமையாக உங்களின் முன் நிற்கிறேன். உங்கள் எல்லோரையும் மிகத் தாழ்மையுடன் நான் அங்கு அழைக்கிறேன். மனமிளக்கியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் என் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அனைவரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்”. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார் அந்த மனிதன்.

“பல வருடங்களுக்கு முன் நடந்த சாதிய வன்முறைக் கலவரத்தில் நான் கலந்துகொண்டு என் சாதி எதிரிகளை ஓடஓட வெட்டிச் சாய்த்தேன். அவர்களின் பெண்களை கதறக்கதறக் கற்பழித்து அவ்ர்களின் பிறப்புருப்புகளை என் கைகளினாலேயே சிதைத்து மகிழ்ந்தேன். மன்றாடியபடி என்முன் மண்டியிட்டு உயிர்ப் பிச்சை கேட்டவர்களின் தலைகளைத் துண்டித்து எக்களித்துச் சிரித்தேன். நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த அந்தக் மதக் கலவரத்திற்குப் பிறகு எதையோ இழந்தவன் போலிருந்தேன். செய்த கொலைகளும், கற்பழிப்புகளும் எனக்கு எந்தவிதமான குற்றவுணர்வையும் தரவில்லை. என்றாலும் என் ஆழ்மனதில் பலவிதமான கதறல்களை இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாளடிவில் அந்தக் குரல்கள் பெரிதாக வளந்து பேரிரைச்சலாக என் காதுகளில் தொடர்ந்து ஒலித்தது. ஓரிரு மாதங்களில் ஒரு மனநோயாளியாகவே மாறிவிட்டேன். வருவோர் போவரிடமெல்லாம் ஏதாவது குரல்கள் கேட்கிறதா என்று கேட்க ஆரம்பித்தேன். தூக்கம் முழுவதும் கெட்ட்து. பலவிதமான உடல் உபாதைகள் தொடர்ந்தது. மருத்துவத் துறை என்னை முழுவதுமாக கைவிட்ட அந்த நேரத்தில்தான் டாக்டர்.குப்புசாமியின் அழைப்பை மேற்கொண்டு அவரின் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்தேன். இப்போது புதுமனிதனாக மாறிவிட்டேன். என் உலகச் சகோதரர்களுக்காக, அவர்களின் சாதி சார்பில்லா கொள்கை ரீதிப் போராட்ட உறுதுணையாளராக நான் மீண்டும் வாழப்போகிறேன்”.
அந்தச் சபையில் எழுந்த கரவொளி அடங்க நீண்ட நேரம் ஆனது. சாதியம் இல்லாத முதல் மனிதனை வடித்தெடுத்த டாக்டர். குப்புசாமியை அரங்கத்தினர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
இனியொரு புவி செய்வோம், சாதியமில்லா மனங்களை ஒன்றிணைப்போம் என்று இரண்டு வரிகளில் கவித்துவமாக தன் நன்றியைக் கூறினார் பேராசிரியர் அகமது. அடுத்த நாள் அனைத்து செய்தித் தாள்களிலும், வார மாதப் பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் ஏராளமான பாராட்டுக்கள், பரிந்துரைகள், எதிர்வினையாடல்களென தொடர்ச்சியாக டாக்டர். குப்புசாமியின் உயரிய பணியை அனைத்து கோணத்திலும் விவாதித்தார்கள். “அரசியலும் சாதியமும்” என்ற தலைப்பில் பொதுஜன பத்திரிக்கை ஒன்றில் வெளியான தலையங்கம் அனைத்து அறிவு ஜீவிகளின் பாராட்டையும் ஒருசேரப் பெற்றது. ஆளும் கட்சியும் எதிரிகட்சியும் பாராளுமன்றத்தில் இந்த ஆராய்ச்சியின் விளைவுகள் குறித்து விவாதித்துக்கொண்டே இருந்தார்கள். பொது மக்களின் கண்டிப்பான பரிந்துறையாலும் அவர்களின் இடைவிடாத போராட்டங்களாலும் மனமிளக்கி மசோதா முன்மொழியப்பட்டு சிற்சில மாறுதல்களுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. சாதிக் கலவரங்களைத் தூண்டி அதன் மூலம் மக்களின் மனங்களை திசை திருப்பி பொது மக்களுக்கோ அல்லது அரசாங்க சொத்திற்கோ பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்தக் கொடுஞ்செயலை நேராகவோ அல்லது மறை முகமாகவோ நிர்வகித்து வழி நடத்தியவருக்கும், அதைச் சர்ந்த சாதிய அங்கத்தினர்களுக்கும் இந்த மனமிளக்கியை கண்டிப்பாக கொடுக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாவதாக மரண தண்டனைக் கைதிகளும், ஆயுள் கைதிகளும் இந்த மனமிளக்கியை உட்கொள்ள சம்மதித்தால் அவர்களின் தண்டனையிருந்து முழுக்கழிவும் பரிந்துரைக்கப்பட்டது.

சட்டமியற்றிய ஓராண்டிற்குள் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டது. அதிபிரதி நிதித்துவம் கொண்ட சாதி மக்கள் சிறுபான்மை சாதிமக்கள் வாழும் இடத்திலிருக்கும் நீர்நிலைத் தொட்டிகளில் மனமிளக்கியை இரவொடு இரவாக கரைத்து ஊற்றினார்கள். அப்படி குற்றமிழைத்த சாதிக்காரர்கள் ஒட்டு மொத்தமாகச் சிறை செல்ல அவர்களுக்கும் சிறையில் மனமிளக்கி கொடுக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலுக்கும் சாப்பாடு டப்பாவிற்கும் இரகசிய குறியென்களால் வடிவமைக்கப்பட்ட பூட்டுக்க்களை தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதி செய்தன.
தூக்குத் தண்டனை கைதிகளில் முப்பது சதவிகித குற்றவாளிகள் மட்டும் மனமிளக்கியை உட்கொள்ள ஒப்புக்கொண்டனர் என்ற தலைமை நிர்வாகச் சிறையதிகாரி ஒரு பேட்டியில் கூறினார். புள்ளி விபரத்திற்குப் பெயர்போன ஒரு நாளிதழ் முதல் பக்கத்தில் கட்டம் போட்டு கிண்டலுடன் அதை வேளியிட்டது என்றாலும், சாதிகளை விட்டொழிக்கும் மனிதகுலத்தின் முதல் மைல்கள் இந்த முப்பது சதவிகிதமென கொட்டை எழுத்தில் மற்றுமோர் பத்திரிக்கை பதிலடி கொடுத்தது. மேடையேறிப் பேசியது மட்டுமல்லாமல் தொடர்ந்து விவாதப் பட்டரைகளும் நடத்தினார்கள். கருப்புச் சந்தையில் மனமிளக்கியை மொத்தமாகக் கொள்முதல் செய்து பூமியில் புதைத்தது ஒரு சதிக் கூட்டம். மற்றொன்றோ சட்ட விரோதமாக உண்ணும் பொருட்களில் ரகசியமாகக் கலந்தது. மாறி மாறி நடந்த இந்த சாதி சார்ந்த குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட ஏராளமானவர்களுக்கு மனமிளக்கி கொடுக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு மூன்றாம் உலகப் போரையோத்த இந்தச் சமூக சமநீதி போராட்டத்தில் ஆயிரக் கணக்கிலிருந்த சாதிகள் ஒரு வழியாக குறைந்து கடைசியாக எஞ்சியது இரண்டே சாதிகள்தான். ஒன்று மனமிளக்கியை உட்கொண்டு சாதியை முற்றிலும் துறந்த ஒரு பிரிவினர்கள், மற்றொன்று அனைத்து சிறு சாதிகளையும் தன் அரசியல் பண பலத்தால் வென்றெடுத்து தனிப் பெரும்பான்மையுடன் நிற்கும் மற்றோரு சாதி.

டாக்டர். குப்புசாமி மனமிளக்கிச் சட்டத்தை மீண்டும் மாற்றியமைக்க அவரால் இயன்றவரை தொடர்ந்து அரசாங்கத்திடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. மனிதனின் ஒவ்வொரு நிலைகளிலும் வளர்ச்சியின் உச்சத்திலும் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். தன் உயரிய குறிக்கோளை அடைய சிறிதும் தயங்காது விடாமுயற்சியுடன் போராடும் டாக்டர். குப்புசாமியை சந்திப்பவர்கள் அனைவரும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி, “இந்த இரண்டு சாதியில் நீங்கள் எந்த சாதிக்காரர் சார்”?

எழுதியவர் : பிரேம பிரேமா (2-May-14, 1:19 pm)
பார்வை : 288

மேலே