+++ அன்பின் வேர் +++

மனிதம் வாழத்தான் மார்க்கங்கள் தோழா!
மனிதம் வீழுமெனில் மார்க்கங்கள் தவிர்!
வாழ்விக்க ஆயிரம் வழிமுறைகள் தேடலாம்
வீழ்த்த எதற்கு பலப்பல வழிமுறைகள்?
சட்டங்கள் திட்டங்கள் ஏன்? எதற்காக?
தண்டனைகள் தீர்ப்புகள் ஏன்? எதற்காக?
எல்லோரையும் சரியான வழிசெலுத்தவா?
எவருக்கும் தீங்கின்றி வாழ்விக்கவா?
அடக்குமுறை கட்டுப்பாடு வாழ்விக்குமா?
அடக்கி முடக்கி வாழ்வித்தால் நிலைபடுமா?
அடக்கம் கட்டுப்பாடு உள்ளுக்குள் வரவேண்டும்!
அன்பும் அறமும் அதனாலே பெருகவேண்டும்!
உள்ளிலிருக்கும் உத்தம குணத்தை
வெளிக்கொண்டு வரவேண்டும் வழிமுறைகள்!
உள்ளேயிருக்கும் தீயவற்றை உள்ளுக்குள்
வீழ்த்த வைக்கவேண்டும் சம்பிரதாயங்கள்!
எல்லோர்க்குமான மார்க்கமென்று எதுவுமில்லை!
எல்லோர்க்குமான வழியென்று ஒன்றுமில்லை!
எல்லோர்க்கும் பொதுவென்று பலவுமுண்டு!
எல்லோரையும் வாழ்விக்க மனிதமேநன்று!
உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
உரியதாவது பசி தாகம் காதல்தானே!
வாழும் முறையும் விதமும் வெவ்வேறுதானே!
வழியில் பிறர்துயர் தவிர்ப்பதே மனிதம்!
என் மார்க்கம்தான் சிறந்தது எனபோதிக்காதீர்!
என் வழிமுறைதான் உயர்ந்தது எனக்காட்டாதீர்!
என் மார்க்கங்களில் சிறந்தது எனபோதிப்பீர்!
என் வழிமுறையில் உகந்தது எனக்காட்டிடுவீர்!
அடிப்படை எண்ணம் அன்போடு இருக்கட்டும்!
அனைவருக்கும் வாழ்வு அதனாலே பிறக்கட்டும்!
இனிவரும் தலைமுறை நம்மாலே கற்கட்டும்!
எதிர்வரும் வழிமுறை நம்மாலே சிறக்கட்டும்!