தலையெழுத்தை நீ மாற்று
பொன்மை நிறம் கொண்ட
பெண்மை எழில் கண்டேன்
பொறுமை இன்னதென்று
புறத்தார்க்கு உணர்த்தினள் நீ!
பச்சை உடை உடுத்திடுவாய்
பரவசமும் அள்ளித் தருவாய்
கார் மேகம் உனைத் தழுவ
மாரி யெங்கும் பெய்திடுவான்
ஆதவன் தன் ஆதங்கத்தை
செங் கனலாய் பொங்கிடுவான்!
கானல் தனை புறம் கொள்வாய்
புனல் தனை அகம் கொள்வாய்
அகழ்வாரைத் தாங்கிடுவாய்
அண்டம் வரை ஈர்த்திடுவாய் - உன்
விசை தீர்ந்து விட்டால்
நிலமிசையில் ஏதுமில்லை
எத்திசையும் பயனில்லை!
கருக் கொண்டு நீ பெற்ற
மரங்களையும் வெட்டுகிறோம்
மதம் கொண்டு மதம் யென்று
மனிதனையும் வெட்டுகிறோம்
பூமி எங்கும் பூக்காடாய்
நீ விரித்த புல்வெளிகள்
தறிக்கெட்ட மனிதர்களால்
மயானமாய் ஆனதிங்கே!
சேர்த்து வைத்த நீர் நிலையும்
கை கோர்த்து வரும் ஆற்று வழியும்
விண்ணைத் தொடும் கட்டிடமாய்
மண்ணை மூடி விட்டதென்ன
உந்தன் நிலை மாற்றி
பிழை யாக்கிப் போனதென்ன!
வழி மறித்து விட்டதனால்
மழை நீரும் வெள்ளமாச்சு
குளிர் தென்றல் கூட
சூறாவளி ஆயிற்றே
மனிதன் செய்த பிழைக்கெல்லாம்
உன்னை தினம் சாடுகின்றான்
உண்மை கொன்று சாகின்றான் !
பொறுக்கும் வரை பொறுத்து விட்டாய்
பொறுமை எல்லை கடந்து விட்டாய்
சீற்றம் கொண்டு வாய் பிளந்து
இவர் கொட்டம் நீ அடக்கு
தலைகீழ் புரண்டெழுந்தும் எங்கள்
தலையெழுத்தை நீ மாற்று!!!