மௌனமாய் விலகுகின்றேன்

"மௌனமாய் விலகுகிறேன்"

(சிறுகதை)

மரண அவஸ்தையில் நான், ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்களின் கண்ணீர் ததும்பும் அழுகைக் குரல் என் காதில் விழுகின்றனவே.. என் சப்தநாடிகளும் அடங்கிவிட்டனவா? அப்புறம் ஏன் என் ஆர்ப்பரிக்கும் மனதின் ஓசை என்னைச்
சுட்டெரிக்கின்றது.. அப்படியென்றால் இன்னும் நான் மரணிக்கவில்லையா? ஏன் என்னால் அசைக்க முடியவில்லை.. இமைகளைத் திறக்க முடியவில்லையே ஏன்..ஏன்..? வேண்டாம் திறக்க வேண்டாம்.. அப்படியே இருக்கட்டும். எனக்கு யாரையும் பார்க்கவே பிடிக்கவில்லை.. மிகவும் பிடித்த, உயிருக்குயிராய் நேசித்த அவனே, அமிர்தமாய் என் வாழ்வில் இனிமையாய் நுழைந்தவன், அமிலத்தை அல்லவா என் நெஞ்சில் வீசி எறிந்து விட்டான்.... நான் போகணும்.. யாரும் என்னைத் தொந்தரவுப் படுத்த முடியாத தூரத்திற்குப் போய்விடணும். திரும்ப வர இயலாத இடத்திற்கு போயிடணும். ஐயோ ..! என் கை கால்களை அசைக்க முடியவில்லையே,,?"

"மருத்துவரைய்யா, என் மகளுக்கு என்னாச்சு..? ஏன் இப்படி இருக்கின்றாள்" அது யார் குரல்? அம்மா குரல் போலிருக்கே.." "அம்மா, நான் இங்கு தானே இருக்கேன்" அம்மா அழறாங்களே.. அவர்களை சமாதானப்படுத்துனுமே.. "ஏதோ ஒரு அதிர்ச்சியான செய்தி அவங்க இதயத்தைப் பாதித்து விட்டது. அதைத் தாங்கமுடியாமல் அவங்க மூளைக்கு செல்லும் நரம்பு செயலிழந்து போய்விட்டதால், கோமா நிலையில் உங்கள் மகள் தற்போது இருக்கின்றார்கள். பிழைக்கனும் என்ற போராட்டமே அவர்களுக்குள் ஏற்படாததால், அவர்கள் மூளை செயலிழந்து கொண்டேப் போகின்றது" மருத்துவரின் பதிலைக் கேட்ட அம்மா கதறி அழுகின்றார்களே.

"அம்மா, அழாதீர்கள்.." சொல்ல நினைக்கின்றேன். ஆனால் முடியவில்லையே. வழியும் கண்ணீர் நான் உணர்வோடு இருப்பதைச் சொல்கின்றதா? கண்ணீரைத் துடைப்பது யார் கரம்? மீண்டும் ஆர்ப்பரிக்கின்றது மனது. "எப்படியடா உனக்கு மனது வந்தது என் மேல் பழி சுமத்த..? சகலமும் நீயே என்றிருந்த என் மேல் சகதியை வாரி இறைத்து விட்டாயே..? அதற்கு பதில் என்னைக் கொன்றிருக்கலாமே நீ..?" மௌனமாய்க் கதறுகின்றேன்... இன்னும் எத்தனை நாள் இப்படி இருப்பேன்.. இறைவன் எனக்கு கொடுத்த கெடு இன்னும் முடியலையா?"

"வா தம்பி.. பாரு, கலகலத்துக் கொண்டிருப்பவள் காகிதமாய் துவண்டு போய் கிடப்பதைப் பார்.." அம்மா யாரை அழைக்கின்றார்கள்.. என் அருகில் யாரோ உட்காருகின்றார்களே.. யார்..? ஏன் என் மனது இப்படி பட்டாம்பூச்சியாய் படபடக்கின்றது.. யாருடைய அருகாமை என் இதயத்தை இப்படி துடிக்க வைக்கின்றது. அந்த உணர்வை அவன் மட்டுமே எனக்கு கொடுக்க முடியும்.. அப்படியென்றால் அவனா? வினாக்களாய் என் உள்ளுணர்வு.. "கொஞ்ச நேரம் பார்த்துக்கோப்பா, நான் ஒரு போன் பண்ணி விட்டு வருகின்றேன்" அம்மாவின் குரல். அம்மா யார் பொறுப்பில் என்னை விட்டுச் செல்கின்றார்கள்.? "அம்மா போகாதீங்க.. " என் குரல் எனக்கே கேட்டலையே.. அம்மாவிற்கு எப்படி கேட்கும்?

"கவிமா, என்னை மன்னித்து விடு, ஆத்திரத்தில் அறிவிழந்து அவசரப்பட்டு உன்னைத் தூற்றிவிட்டேன்.. ஐயோ, ஒரு அழகான ஓவியத்தை நானே சிதைத்து விட்டேனே.." என் கைகளை இறுக்க பற்றிக்கொண்டு அரற்றுவது சாட்சாத் அவனா.? "விடுங்க, என்னை வாழதான் விடவில்லை, சாகவாவது விடுங்களேன்" ஆத்திரத்துடன் அவன் கையை உதறிட துடிக்கின்றேன். ஆனால் முடியவில்லை. அவன் இறுக்கப் பற்றியிருக்கின்றானா அல்லது நான் செயலிழந்து கொண்டே போகின்றேனா? " இது என்ன சொட்டு சொட்டாய் தண்ணீர்த் துளிகள் என் கைகளின் மேல் விழுகின்றது. ? ஐயோ.! அவன் அழுகின்றானா?" எனக்காக கண்ணீர் விடும் அவனை நினைக்கையில் மனம் பனிக்கட்டியாய் இளகுகின்றது. என்ன பெண் மனம் இது.. சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லியவனின் கண்ணீர் இப்படியா எல்லாவற்றையும் மறக்கடிக்கும்?

அந்த அளவிற்கு அவனை நேசித்ததால் தான் மனம் மன்னித்து விடச் சொல்கின்றதா? இன்று மன்னித்து விட்டால், நாளை வேறொரு சந்தர்ப்பத்தில் இதே தப்பை அவன் செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்..? ஐயோ.. இப்போது மன்னிப்பதா வேண்டாமா.. யார் என்னை இப்படி இழுப்பது? இத்தனைப் பேர் என்னைச் சுற்றி இழுக்கின்றார்களே ஏன்? இழுக்காதீங்க, நான் இன்னும் அவனிடம் நிறைய பேசி கதறனும்., என்ன அதற்கு நேரமில்லையா? அவனை விட்டு தூர இழுத்து செல்றாங்களே.... அவளின் கதறல் ஒலி மெல்லியதாய் குறைந்து கொண்டே போயிற்று. அவளை இதுவரை செயற்கை முறையில் சுவாசிக்க வைத்திருந்த கருவியின் துடிப்பும் அதுபோலவே மெல்லிய ஒலியாய் மாறி கடைசியில் நின்றும் போனது.

ஆரவாரமாய் மருத்துவரும் தாதிகளும்.. அலறியபடி அவள் தாய்.. மௌனமாய் கதறும் அவன். ஆற்றமாட்டாமல் அவன் துடிதுடிப்பதாய் பரிதவிப்புடன் பார்க்கின்றாள் அருவமாய் அவள்...

........முற்றும்...........

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-May-14, 6:52 am)
பார்வை : 367

புதிய படைப்புகள்

மேலே