கருப்பை தாங்கிய கடவுள்களே - வினோதன்

ஈரைந்து திங்கள் - உன்
உடலுளொரு வீடுகட்டி
குருதியில் கொஞ்சம்
குடிக்கக் கொடுத்து - உன்
உயிரைக் கொடுத்து - எனக்கு
உயிர் கொடுத்தவளே !

என் அழுகைகளை
மொழி பெயர்த்து,
என் தேவைகளுக்கு
சேவை செய்து - சிவப்பெனில்
பயப்பேனோ வென்று
திரித்து பாலாக்கி - பருகக்
கொடுத்து வளர்த்தவளே !

கட்டை விரல் சூப்பிய
என்னை - கண்டிக்காமல்
நிலவைப் கண்டுபிடித்து
கடிக்க கொடுத்தவளே !
நான் விழுந்து எழும்முன்
என்னருகில் நிற்பவளே !

பல் விழிக்கும் முன்னமே
என்னை தமிழன்னைக்கு
பழக்கப் படுத்த - சிரத்தை
எடுத்து - என் சித்திர
எழுத்துகளையும் - பிறர்
பொறாமைபட - மெச்சி
பெருமை பட்டவளே !

மட்டையாட மைதானம்
தொட்டுவிட்டுத் திரும்பி
வாசல் வரும்போது
அப்பாவெனும் சிங்கத்தின்
சினத்திடம் தலைகொடுத்து
எனைக் காத்தவளே !

சிற்சில தவறுகள்
செய்கையில் பொறுத்து,
பெருத்த தொன்றை
செய்கையில் சினந்து
கையோங்கி அடித்துவிட்டு
கண்ணருவி திறப்பவளே !

வறுமையாற்று வெள்ளத்தால்
வாழ்க்கை வறண்டபோதும்
நெய்யூற்றி சோறூட்டி
கை நீட்டியதேல்லாம் - என்
வாய்சேர்த்த வல்லவளே !

மதிப்பெண் கொழுத்த
தாளுடன் வருகையில்
தலைகால் புரியாமல்
தன் கால் உசத்தி குதித்து
எனை உற்சாகம் - குடிக்க
வைக்கும் வானவளே !

முனைவர் பட்டம்
முற்றம் வருகையிலும்
எனை மொட்டாய் பாவித்து
கண்ணிமையில் வைத்து
பாதுகாக்கும் பெற்றவளே !

நீ காட்டிய அன்பை
நான் திரும்ப கட்ட
யுகங்கள் தேவையென
ஊகிக்கிறேன் - ஜென்மங்கள்
உண்டெனில் - என்
மகவாய் மடிசேர் - உன்
அன்பின் கணளவில்
கொஞ்சமாய் தந்துவிட !

தன்னை விடவும்
என்னை நினைப்பவள்
தாரமாய் வரவிருக்கலாம்
என்னை விடவும்
என்னை நினைப்பவள்
தாயின்றி வேறாரோ ?

உழைத்து ஓய்ந்த
உன் கால்களுக்கு
காலணிகளை விட
என் வெற்றிகளே
பொருத்தமாய் இருக்கும் !

பெற்ற இரண்டாண் புலிகள்
இருபுறமும் துணை நின்று ...
வெற்றிகளை வேட்டையாடி
வீட்டுவாசல் கட்டுகிறோம்,
எண்ணிக்கொண்டும்
எண்ணிக்கொண்டும் இரு...!

உன் மகனாய் பிறக்க
என்ன வரம் பெற்றேன் ?
தெரியவில்லை - எந்த
வரம் பெற்றால் - நீயென்
மகவாய் பிறப்பாய்
சொல்லிவிடு என் தாயே ???


-------------------------------------------------------
எனது அம்மா திருமதி. தேன்மொழி இரவிச்சந்திரன் அவர்களுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!

ஒவ்வோர் செயலிலும்
தன்நலன் கருதாது - தம்
குருத்தின் நன்னலம்
கருதும் - கருப்பை
தாங்கிய கடவுள்களே ...!

மேலும்...எழுத்து தள எழுத்து உறவுகளுக்கும், உறவுகளின் தாய்களுக்கும் என் பணிவான வாழ்த்துகளும் வணக்கங்களும் !!!

எழுதியவர் : வினோதன் (10-May-14, 8:35 pm)
பார்வை : 149

மேலே