ஈடில்லை அன்னை அன்புக்கு
ஈரைந்து திங்கள் கருவில் சுமப்பாள்
ஈன்றபின் அவள்தன் நெஞ்சில் சுமப்பாள்
ஈடில்லை அன்னையர் அன்புக்கு உலகில்
ஈண்டு பகர சொல்லில்லை மொழியில் ...!!
தானுருகி ஒளிகொடுக்கும் மெழுகு வர்த்தியாய்
தான்தேய்ந்து மணம்பரப்பும் சந்தனக் கட்டையாய்
தன்னைத்தானே வருத்திப் பிள்ளைகள் பேணும்
தன்னல மில்லா தகைமை யுடையாள் ....!!
பக்குவமாய் சமைத்து பரிவாய் பரிமாறி
பாரபட்ச மில்லா பாசப்பங்கீடு செய்வதில்
அன்னைபோல் தெய்வம் அகிலத்தி லுண்டோ
அன்பிலவளை மிஞ்சிட உறவு வேறுண்டோ ...??
இடுக்கண் வரினும் இக்கட்டு எனினும்
இதமாய் பதமாய் இன்னல் களைவாள்
துன்பம் நேர்கையில் தோளில் தாங்கி
துவளா வண்ணம் நம்பிக்கை யூட்டுவாள் ...!!
தாய்மடியில் தலைசாய்க்க கவலை தீரும்
தாங்கொணா சோகமும் சுக சுமையாகும்
கருவறை சுமந்ததுமுதல் கல்லறை புகும்வரை
கருணை உள்ளத்தின் கடமை ஓய்வதில்லை ...!!
தேவைக ளுணர்ந்து குறிப்பா லறிந்து
சேவைகள் செய்வதில் தன்னிக ரற்றவள்
தேவதை மண்ணில் தாயென்றால் மிகையில்லை
மேதினியில் கண்கண்ட கடவுள் வேறில்லை ...!!
(எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் )