கூண்டில் பெண்மை

கூண்டில் பெண்மை

இருள்வானில் எழுந்துநிற்கும்
நிலவு தானே பெண்என்றாய்,
இருள் வாழ்வில் தனித்து நிற்பாய் என்று
ஒரு போதும் கூறவில்லையே!

மாவிலைத் தோரனத்துடன்
சொந்த பந்தம் சுற்றம் சூழ
வெட்கிச் சிவந்து கொண்டே நான்
மஞ்சள் தாலிக்குள் குடி புகுந்தேன்!

மாதம் மூன்று முடியும் முன்பே
மஞ்சள் தாலி காயும் முன்பே
மங்கலமான என் முகம்
மங்கிப் போனது ஏனோ!

சுவரொன்றில் தூசி கண்டு
சுட்டெரித்தாள் மாமியார்
சுவையொன்றும் இல்லையென்று
சுமை கொடுத்தாள் நாத்தனார்!

சுகந்திரம் கேட்டு நான்
சூறாவளியாய் எழுந்து நின்றேன்
சுமை தாண்டி வசந்தம் வருமென
எனை சுமந்தவள் சுகம் கொடுத்தாள் !

ஆகுமென்று கற்ற கல்வியை
அடுப்பறைக்குள் தொலைத்து விட்டேன்
கண்ணாய் காப்பாரென்று எண்ணி வந்தேன்
கண்ணைக் கொத்தும் பாம்பாய் சீறினான்!

ஆயிரம் பாரதி பாடினால் கூட
அடிக்கத் துடிக்கும் ஆணின் கைகள்
அடங்கி ஒடுங்கும் வரை
அகலாது பெண்ணடிமை!

ஆகாயம் நோக்கி பெண் பறந்தாலும்
அனைத்துத் துறையிலும் கால் பதித்தாலும்
அஞ்சாத் துணிவு கொண்டிருந்தாலும்
குற்றவாளி கூண்டில் தான் நிற்கிறது பெண்மை!...

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (12-May-14, 2:11 pm)
Tanglish : koondil penmai
பார்வை : 543

மேலே