===+++ஓ மானுடமே+++===
எங்கள் ரத்தத்தால்
சிவந்து கிடக்கிறது
மானுட வானம் - அதில்
கருகிப்போன கருப்புநிலவாய்
விடுதலை தாகம்...
ஏவுகணைகள் துப்பிய
அணு எச்சில்களில்
கிழிந்து கிடக்குற
மண்ணையும் மக்களையும்;
சர்வாதிகார பட்டறையில் வடித்த
முனையற்ற ஊசிகள்
தைக்க முனைவதாக தம்பட்டம் ஒலிக்கிறது...
குற்றுயிரும் குலையுயிரும்
பிணங்களுமாய் கிடக்கையிலே
வக்கற்ற மனிதகுலம்
வருந்தியதா அப்பொழுது....?
மார்க்சின் எழுதுகோல்கள்
உடைக்கப்பட்டு
மாவோவின் துப்பாக்கிகள்
நொறுக்கப்பட்டு
புத்தனின் போதனைகள்
எரிக்கப்பட்டு - ''இதோ''...!
இன்றும்
சர்வதிகாரத்தின் காலடியில்
மிதிபட்டுக் கிடக்கிறோம்...
''வாய்கிழிய பேசுகிறது மானுடம்;''
மனிதமே இல்லாத மனிதத்தை...
துப்பாக்கி முனைகளால்
சடலங்களை புணர்ந்தவன்
மனிதனென்றால் - அவன்
தலையறுக்க எழுகின்ற
நாங்களெல்லாம் மிருகங்கள்தான்;
உங்கள்
நொள்ளைக் கண்களுக்கு...
சிரியாவில் அழுதால் கேட்கிறது
வியாட்நாமில் கதறினால் கேட்கிறது
உகாண்டாவில் குமுறினாள் கேட்கிறது
ஈழத்தின் ஓலம் மட்டும் ஏனோ கேட்கவில்லை
இந்த மானுட பாம்புகளின் காதுகளுக்கு...
ஓ... மானுடமே...
குருதிப் பெருங்கடல் நடுவில் - எங்கள்
சதைகளாலான சிறுதீவு இருக்கிறது;
வந்துவிட்டுப்போங்கள்
இதுதான் புத்தனின் புனித தேசமாம்
கண்டுவிட்டுப் போங்கள்...
ஆனால் ஒன்று...!
நீங்கள் வந்தாலும்சரி
வரவில்லை என்றாலும்சரி
இனிவரும் காலங்களிலும்
கடைசித்தமிழனின் கடைசித்துடிப்பும்
ஈழத்திர்கானதாகவே இருக்குமென்பதை
மறந்து விடாதீர்கள்...!!!
நிலாசூரியன்.=== மே 18 ஐந்தாம் ஆண்டு நினைவுகளில்).