இல்லாமை

பகலெல்லாம் உப்பி
இரவெல்லாம் மெலியும்
பொழுதெறியக்
காணாமல் கண்ணுறும்
சுழற்ப்பந்து

ஏக காலத்தில்
எழுதிய
மரணச் சரித்திரத்தில்
துவாரம் தேடும்
உறங்கும் எரிமலை

உற்றவர்
உறங்குதல் போல
கண்மூடிய பூனைக்குப்
பாலாய்ச் சொட்டும்
காற்றறியாக் காதல்

தொடுக்கக் தொடுக்க
நீளுகின்ற நாரும்
பூக்களுமாய் - மானுடம்
கமழும்
கனவுகளின் குகை

கதையாகி
விசும்பும் வருடங்களின்
முடிவில் - புதியதாய்ப்
பிறக்கும் கருவிற்கு
உருவமில்லாப் பொம்மை

இறுகும்
விரல்களுக்கிடையில்
சுருங்கும் உலகமாய்
ஓங்கும்
உள்ளங்கை வலிமை .....

வறுமையின்
நிழலில் - பசித்திருக்கும்
மரமெனக்
கனிகள் கொழுக்கக்
கலங்கும் கிளைவேதனை

ஆழமறிந்த கடலிடம்
வேலையில்லை ........!

எழுதியவர் : புலமி (14-May-14, 2:35 am)
பார்வை : 105

மேலே