அடக்க ஆற்றலின் கூடு -----கவித்தா சபாபதி
தோழமை நெஞ்சங்களே...
வணக்கம்...
சிறப்புக் கவிதை என்று தளத்தில் கவிதைகளைப் பதிய நான் முனையும் போழ்து சிலரின் படைப்பு ஒரு வித தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியத்தின் விளைவாய் அத்தகையரின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்தேன்...அதில் என்னை பிரமிக்க வைத்த சிலரின் சங்கதிகளைக் கேட்டுப் பெற்றேன்...பெற்றதில் மகிழ்ந்தேன்...
இந்த வரிசையில் தோழர்கள் லம்பாடியும்...கவித்தாசபாபதியும் அடங்குவர்...இருவருமே திறன் மிக்க படைப்பாளிகள்...அவர்களை வாழ்த்துகிறேன்...
இவர்களுள் தோழர் கவித்தாசபாபதியும் பற்றி வானம்பாடி காலத்திய படைப்பாளிகளுள் ஒருவரான நா.கா. என எங்களால் பாசத்துடன் அழைக்கப்படும் கவிஞர்.நா.காமராசன் தோழர் கவித்தாசபாபதியும் பற்றி எழுதியுள்ள ஒரு குறிப்பை பதிவதில் மகிழ்கிறேன்..
=====$$$$$========&&&&&&=======@@@@@=======
ஒரு
காட்டுநதியின் கதை
கவியரசு நா.காமராசன்
எழுபதுகளின் ஆரம்பத்தில் மலர்மன்னன் எழுதிய ஒரு நாவலுக்கு "மலையிலிருந்து வந்தவன்" என்று பெயரிட்டு "தீபம்" இதழில் வெளியிட்டார் அமரர் நா.பா. இதே பெயரில் என் இளம் தோழன் கவித்தாசபாபதியை அழைப்பதே பொருத்தம்
நீலமலைத் தேயிலைக் கொழுந்துகளுக்கு உரமாகிவிட்டு... காட்டுநதியாய் ஓடிக்கொண்டிருக்கும் படுகர் குழுவைச் சேர்ந்தவன் கவித்தா.
எஸ்கிமோக்களின் துருவப் பிரதேசத்தில் எழுதக்கூடப் போதாத சிறு வீச்சாக வரும் சூரிய வெளிச்சத்தில் கவிதை எழுதிவிட்டு "கவிதை என் கைவாள்" என்றான் ஒரு கவிஞன். அதைப் போலவே இவனும் ஒரு போராளி கவிஞனே!
ஆப்பிரிக்கக் கண்டத்து நீக்ரோக்களின் தேவதூதனான மண்டேலாவைப் பற்றிய அற்புதமான கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது..என் இனிய கவித்தாவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
ஊட்டிக் குளிரிலே கைகட்டிக்கொண்டு, தனி மனிதனாய்த் திரியாமல்... பனியில்மேல் ஓடும் அதிசய ஜீவநதியாக ஒரு இளைஞர் கூட்டத்தையே திரட்டி இலக்கிய தவம் வளர்த்துக்கொண்டிருப்பவன் இவன்.
புதுக்கவிதை ஒரு தூற்றுச்சொல்லியாகவும்... தேய்ந்து போன லாடத் து்ண்டாகவும்…. பலவீனப்பட்டுப் போய்விட்ட... இந்த இருண்ட காலத்தில் "கவித்தா" ஒரு உதயத்திற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி சாதித்தவன்.
இவனது சொற்பிரயோகத்தில் ஒரு சிற்பியின் கவனமும், ஓவியனின் அழுகுணர்ச்சியும் கலந்து வெளிவரும் ஓர் அபூர்வ குணவார்ப்பாகவே எனக்குத் தெரிகிறது. வாழ்க்கையை ஆழமாக பரிசீலனை செய்து நீண்ட உழைப்பில் உருவாக்கப்படும் கவிதைகள் என்றும் தோற்பதில்லை!****
இந்தக் கவிஞனே விதையாக விழுந்து பூத்த நவ கவிதைப் புத்தகம் "சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள்"”.
பாரதியின் புத்தகத்தைப் படித்த ரசிகர்கள் அதை படிக்கும்போது ஒரு குழந்தையைத் தொடுவதுபோல் இருக்கிறது என்றார்கள். இவனது "சிறகடிப்புகள்" நம்மையையே சிலிர்க்க வைக்கின்றன. அந்தத் தொகுப்பே ஒருகுழந்தையாகி நம்மை தொட்டுப் பேசுகிறது.***
ஆரம்ப காலத்திலேயே அற்புதமாய் எழுதியவன் பிறகு ஆயிரம் வீணைகளை மீட்டிக்கொண்டு வந்தான். "ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும்" தொகுதி கவித்துவத்தின் கோபுரம்.
சாமியாடிகள் போல தோற்றம் காட்டும் இன்றைய நவீன கவிஞர்கள் காட்டும் பலவகை சாதனைகளையும் மீறிக்கொண்டு கவிநதி ஓடுகின்ற மவுனப்பிரதேசம் இந்த நூல். . .கனவு வாங்கலையோ?, ஒரு தீவிரவாதியின் காதல் டைரி, புயல் வீணைகள், உளியின் கதையும் ஒருபூவன விதையும், என பக்கத்துக்குப் பக்கம் அற்புதமான படைப்புகள்.
வீணைகளோடு சேர்ந்தே வெளியிடப்பட்ட கவித்தாவின் "காதலின்பொன்வீதியில்" எனனும் நெஞ்சத்தைக் கிள்ளும் காதல் நூலில் "சலவைக் கண்ணீர்" ஒரு உறுக்கமான காவியம்.***
ஒவ்வொருஉருவிலும்,உணர்விலும் தேவதைகள் தோன்றும் இவனது "தரையில் இறங்கும் தேவதைகள்" தொகுதி ஒரு மாபெரும் படைப்பு.
இவனது குறிஞ்சி நிலம் பூக்களால் நிறைந்திருப்பதுபொல ஒரு காட்டு நதியின் கதை, ஒரு காட்டுவாசியின் கனவுகள், காட்டுச்சவாரி, மலைச்சோலை மான்களும் ஒரு வைகறைப் பாடலும், குங்கும கனவுகள், என பொன்வசந்தம் பூத்துக்குலுங்கும் இந்நூலை கவித்தா எனக்கு சமர்ப்பணமாக்கி தன் அன்பால் என்னை நெகிழ வைததிருக்கிறான்.***
தற்போது இவனுள் புதிதாய்க் கருவாகி உருவாகிக்கோண்டிருக்கும் “(கடவுளின் நிழல்கள்”, "மலைப்பிரதேசத்து ஊமைக்குயில்" ஆகிய இவனது எதிர்வரும் இலக்கிய வெளியீடுகள் சிந்தனைச் சிகரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இந்நூல்களை கவித்தா நேரமெடுத்து சிற்ப்பாக வெளியிட வாழ்த்துகிறேன்
கவித்தா ஒரு வித்தியாசமான இளைஞன். அவன் இலட்சியங்களை கண்களில் சுமந்துகொண்டு வாழ்வை அழகுபடுத்த வந்தவன். கவிதையெனும் சித்திரக்கூடத்தில் தூரிகையாக மட்டுமல்ல வண்ணங்களாகவும் தன்னைப் பிழிந்தெடுத்துக்கொண்டு தவம் செய்கிறவன்
சாதி மத பேதமற்ற சமூகக் காடுகள் புகுந்து போகிற நாளையுலக நந்தவனம் தனது முதல் வசந்தத்தில் சிவப்பு ரோஜாக்களால் இவனுடைய பூபாளத்திற்கு தலையசைக்கும்!
இவன் குரலெடுத்துக் கூவும்போது சரியாக எங்கள் வானம் விடியும்! வாழ்க தமிழ்! வெல்க பொதுவுடமைத் தத்துவம் !
பின் குறிப்பு:
என்னை தவிர்த்த இன்றைய புதுக்கவிஞர்களின் மத்தியில் கவிஞர்கள் அப்துல் ரகுமான், இன்குலாப், சிற்பி ஆகியவர்களின் சாதனைகளுக்குப் பிறகு கவித்தாவின் சாதனைகள் மிகவிரிவாக பேசப்படும் என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம்!
சென்னை நா.காமராசன்
(20-05- 1997)
கவிஞரின்……திருமகள் நிலைய வெளியீடுகள்
• கறுப்புச்சூரியன் (தொகுப்பு) (1991)
• சிகரங்களைநோக்கிய சிறகடிப்புகள்91991)
• ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும்(1994)
• காதலின் பொன்வீதியில்(1994)
• தரையில் இறங்கும் தேவதைகள்(1997)
• கடவுளின் நிழல்கள்(2014)
• இவர்களால்சிலிர்க்கும்இயற்கை (எதிர்வரும்நூல்)
• மலைப்பிரதேசத்துஊமைக்குயில் (எதிர்வரும்நூல்)